Monday, May 20, 2013

நேற்று என்பது வெறும் கனவு; இன்று நடக்கக் கூடியதை முதல் கவனி!

நாம் உணர்ந்துகொள்ள மறுக்கும் யதார்த்தங்களில் ஒன்று, எதையும் ஒரே சமயத்தில் பரிபூரணத்துவம் வாய்ந்த முழுமையாகப் பெற்றுவிட முடியாது என்பது. அப்படி முழுமையாகத்தந்தால்தான் எடுத்துக்கொள்வோம் என்று கூறுவதை எதையும் கிடைக்கவிடாமல் பார்த்துக்கொள்கிற சதி நோக்கமாகவே கொள்ள வேண்டும்.

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தரமுடியும் என்பதால் பயணக் கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித் தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

இன்று என்ன யதார்த்தமோ அதைப் பெற்றுக்கொண்டு படிப்படியாக முன்னேறிச் செல்வதே நாம் விரும்பியதைச் சென்றடைவதற்கான வழி. தோமஸ் கார்லைல் என்ற அறிஞர் சொன்னார். நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வதுதான்.

இன்றைய காலத்தை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுதான் எதிர்காலம் மேலும் சிறப்பாய் உருவாக ஆவன செய்ய முடியும். இன்று எது சாத்தியமோ அதைத் தேடுவதை விடுத்து, எதிர்காலத்துக்குரியது எல்லாமும் இன்றே நடந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது வெற்றுப்புலம்பலே ஒழியவேறில்லை.

இந்த நாளில் இந்த கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல. அப்படி சாத்தியமான வழியில் செயற்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.

எப்படிப் பார்த்தாலும் நம்மால் செயல்பட முடியக்கூடிய காலம் நிகழ்காலம் மட்டுமே. நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழிப்பது இருக்கும் நிலைமையை மாறவிடாமல் வைத்திருக்கும் முயற்சியே. புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறிவிடாது, தீர்வும் கிடைக்காது.

நம் விடியலுக்கான தீர்வு இன்று நாம் செய்யக்கூடியதை அறிந்து செய்வதில்தான் உள்ளது. இன்றிருக்கும் நிலையை மாற்ற உண்மையில் விரும்புபவர்கள், நாளைய முழுமையான தேவையைப் பற்றியே வெறுமே பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்காக இன்று வைக்கக்கூடிய முதல் அடியை எடுத்துவைப்பதைப் புறக்கணிக்க மாட்டார்கள்.

இதுபற்றி மகாகவி காளிதாசனின் சிறந்த கவிதை ஒன்றுண்டு. ஆங்கிலம் வழித் தமிழாக்கினால் அந்தக் கவிதை சொல்வது இதைத்தான்:

நேற்று என்பது வெறும் கனவு
நாளை என்பதோ கற்பனை மட்டுமே
இன்று சிறப்பாக வாழ்ந்தால்
அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
அதனால் இன்றைய தினத்தைக் கவனி
அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது

No comments:

Post a Comment