Tuesday, May 7, 2013

முள்ளியவளை காணிப்பிரச்சினை தொடர்பாக ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரடி புகுந்த கதை

முள்ளியவளையில் ஏற்பட் டுள்ள காணிப்பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்படும் என்பதுடன் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமுகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்தநீதி அமைச்சர் ஹக்கீம், பிரஸ்தாப காணிப்பிரச்சினை தொடர்பில் முள்ளியவளை சன சமூக நிலையத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த மக்கள் சந்திப்பிற்கு முன்னதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் வேதநாயகம், பிரதேச செயலர் பி.குகநாதன் ஆகியோரை அமைச்சர் சந்தித்து இந்த விடயங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதில் அரச அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றி இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் யுத்தத்தின் அகோரம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முள்ளியவளையில் காணிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. ஏன்? எதற்காக? இதனைச் செய்தார்கள் என்பதைப் பற்றி கூறுவதைவிடுத்து இனங்களுக்கு இடையில் நிலவும் நல்லெண்ணமும் நல்லுறவும் பாதிக்கப்படாதவிதத்தில் பிரச்சினைக்குரிய தீர்வுகளைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விடயத்தை மிகவும் பக்குவமாக அணுக வேண்டும். மக்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்ட அவசர செயற்பாடுகள் நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. சுற்றறிக்கைகள் பற்றி சாதாரண பொதுமக்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இப்பொழுது சிவன் பூசையில் கரடி புகுந்தது போல வன பரிபாலன திணைக்களம் இதில் தலையிட்டு யாருக்கும் இந்தக் காணி கிடைக்காமலேயே போய்விடக்கூடிய நிலைமையை தோற்றுவித்துள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் நெகிழ்வு தன்னைமயுடன் இப்பிரச்சினையை அணுகுமாறு வன பரிபாலனத்துக்கு பொறுப்பான அமைச்சரை வேண்டவுள்ளேன்.

அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டியுள்ளது. காணிப் பங்கீடு அரச அதிகாரிகளினாலேயே மேற்கொள்ளப்படும். அதில் நாம் சம்பந்தப்பட முடியாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைக்கேற்பவும் காணிப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. வேறு காணியில்லாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்றார். முள்ளியவளை காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் ஹக்கீம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் ஆகியோர் முன்னிலையில் தமது நிலைமையை எடுத்துக்கூறினார்.

2 comments :

Arya ,  May 7, 2013 at 7:03 PM  

இலங்கையின் நீதி துறையை BBCயில் விமர்சித்த இவரை பதவி விலகச் சொல்லி ஏன் எவரும் கேட்கவில்லை ? இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சரியாக நடக்கவில்லை என்று சொல்லும் இவர் ஏன் நீதி அமைச்சர் பதவில் இன்னும் இருக்கிறார் ???

Anonymous ,  May 7, 2013 at 8:21 PM  

சும்மாய் தான்,
ஒரு பொழுது போக்காக ஏதாவது சொல்ல விடுங்களேன் .VS DRAMMEN .

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com