Saturday, May 25, 2013

புத்தியுள்ள சமூகம் தொடர்ந்தும் கஷ்டப்படுமா ?

மனிதன் நாகரிகமடைந்தான் என்பதும், விலங்குகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டான் என்பதும், அவனது அறிவு வளர்ந்ததால்தான். ஆனால் இன்றும் வன்முறை எழுத்துக்களால் பேச்சுக்களால் தூண்டப்பட்டுவிட்டால், தன்னையும் தன் சமூகத்தையும் அழித்துக்கொள்ளுமளவிற்கு புத்தியிழந்து ஆவேசம் கொள்கிறவனாகவே மனிதன் இருக்கிறான். இது மனிதனது தொடரும் அறிவீனம்தான்.

மனிதர்களை விஷயம் நிறைந்தவர்களாக்குவதற்குப் பதிலாக விஷம் நிறைந்தவர்களாக ஆக்குவதையே இன்றைய பத்திரிகைகள் ஊடகங்கள் செய்கின்றன. அத்தகைய பத்திரிகைத் தலைப்புகளையே மக்களும் விரும்பி நுகர்வதாக இன்றைய சூழல் ஆக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையா, நடக்குமா என்றெல்லாம் ஆராயாமல், படித்து விறுவிறுப்பை ஏற்றிக்கொள்ளும் சிலமணி நேர போதையே பலருக்கும் போதுமானதாக இருக்கிறது.

மனித ஜீவனது உன்னத குணங்கள் வெளிப்பட வேண்டும் என்பதே மானுடத்தின் கனவாக இருக்கிறது. இதற்குத் தடையான அறிவீனங்களைக் களைவதே நம் முதல் தேவையாக இருக்கிறது. இதற்குக் கல்வியறிவோடு சமூகம்சார் அறிவும் பெருக வேண்டியிருக்கிறது. வெறும் உணர்ச்சியலைகளில் மிதந்து அடிபட்டுப் போய்க்கொண்டிருப்பதை இனி நிறுத்த வேண்டும்.

அறிவு பாடப்புத்தகங்களுக்குள்ளிருந்து மட்டுமல்லாது, பல் வேறு இடங்களிலிருந்தும் நமக்குக் கிடைக்கலாம். புத்திசாலிகள் பிறருடைய முட்டாள்த்தனங்களிலிருந்து கூட பாடங்கற்றுக் கொள்கிறார்கள் எனச் சொல்லப்படுவதுண்டு. எமது வாழ்தலுக்கு வேண்டிய அறிவை எங்கிருந்தும் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக நாம்தான் நமது மனதைத் திறந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். தன் பணிப்பெண்ணிடமிருந்து பாடங்கற்றுக்கொண்ட ஒரு அரசனின் கதை இது.

ஒரு வேலைக்காரச் சிறுமி. அவளுக்கு அரண்மனையிலே அரசருடைய மஞ்சத்தைத் தயார்ப்படுத்துவதுதான் வேலை. சாதாரண வேலையில்லை. ஹம்சதூளிகா மஞ்சம். அந்தப் படுக்கையைத் தயார் செய்ய கிட்டத்தட்ட நாலுமணி நேரம் ஆகும். ராஜா தூங்குவதென்றால் சும்மாவா? முதலில் ஒரு ஜமுக்காளத்தை விரிக்க வேண்டும். அதன் மேலே மெத்தை. பிறகு அதற்கு மேலே காம்பில்லாத மலர்களைத் தூவ வேண்டும்... இப்படி ஏழு அடுக்குகள் உண்டாக்கி அந்தப் படுக்கையை தயார் செய்ய வேண்டும்.

வழக்கம்போல சிறுமி மஞ்சத்தைத் தயார்ப்படுத்தினாள். வெளியே போயிருந்த ராஜாவும் ராணியும் இன்னும் திரும்பி வரவில்லை. திரும்பி வருவதற்குள் இந்தப் படுக்கையில் ஒரு தடவை படுத்துப் பார்த்தால் என்ன? என்று யோசித்தாள் சிறுமி. ஒரு அஞ்சு நிமிசம்தானே... என்று எண்ணிக்கொண்டு, அதிலே ஏறிப்படுத்தாள். ஆனால், பாவம்! படுத்ததும் சுகமான தூக்கம் வந்துவிட்டது.

ராஜாவும் ராணியும் வந்து பார்த்தனர். அழுக்கு உடைகளோடு சிறுமி அரச மஞ்சத்திலே உறங்கிக்கொண்டிருந்தாள். ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. காவலாளிகளைக் கூப்பிட்டு, சிறுமியை ஒரு தூணிலே கட்டிவைத்துச் சாட்டையாலே அடிக்கும்படி உத்தரவு போட்டார். சாட்டையடி விழ விழ, அந்தச் சிறுமி சிரிக்க ஆரம்பித்தாள். அடி வாங்கிக்கொண்டு, அழாமல் சிரிக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து ராஜாவுக்கு ஆச்சரியம். அழாமல் ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார். மகாராஜா உங்கள் படுக்கையில் நாலு மணி நேரம் படுத்ததுக்கே எனக்கு இத்தனை சவுக்கடி கிடைக்குதே! வாழ்நாள் முழுக்க அந்தப் படுக்கையிலே படுத்த உங்களுக்கு எத்தனை சவுக்கடி கிடைக்கப்போகுதோ என்று நினைச்சேன்... அதுதான் சிரிப்பு வந்துவிட்டது என்றாளாம். அதன்பிறகே அந்த ராஜாவுக்குப் புத்தி வந்ததாகக் கதை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com