Thursday, May 30, 2013

முதலாவது தொடர்பாடல் செய்மதியை இலங்கைக்கு வழங்க சீனா ஒப்பந்தம்!

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செய்மதியை வழங்குவது தொடர்பான உடன்பாடு பீஜிங்கில் நேற்று முன்தினம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, இலங்கையில் சீனா தனது செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளவுள்ளதாக சைனா டெய்லி நாளிதழ் தெரிவித்துள்ளது.

சீனாவின் வர்த்தக செய்மதி சேவைகளை அனைத்துலக சந்தையில் வழங்கும் அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமான சீன கிரேட்வோல் நிறுவனம் இலங்கையின் சுப்ரீம்சற் நிறுவனத்துக்கு எதிர்காலத்தில் செய்மதியை வழங்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் முன்னிலையில், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் இரு நாடுகளும், வர்த்தகம், முதலீடு, விவசாயம், விண்வெளித் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுள்ளன.

இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில், இலங்கையின் பொதுவான அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சீன அதிபர் தெரிவித்துள்ளார். DFH-4 செய்மதித் தளத்தில் இருந்து சீன நிறுவனம் இலங்கைக்கான தொலைத்தொடர்பு செய்மதிக்கான சேவைகளை வழங்கவுள்ளது.

இதன்மூலம் இலங்கை மற்றும் அதன் அயல்நாடுகளுக்கான தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. செய்மதி எப்போது விநியோகிக்கப்படும் என்பதையோ, இதன் முதலீடு எவ்வளவு என்பது குறித்தோ சீன நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. செய்மதிகளை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றைக் கட்டுப்படுத்துபவர்களுக்கான பயிற்சிகளையும் சீன கிரேட் வோல் நிறுவனமே வழங்கிவருகிறது.

சுப்ரீம் சற் நிறுவனத்துக்காக, ஒலிபரப்புச் சேவைகளை வழங்குவதற்கு சீன நிறுவனம் கடந்த நவம்பரில் தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவியது. மே மாதம், ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 18 நாடுகளுக்காக 43 செய்மதிகளையும், 37 ஏவும் சேவைகளையும் மே மாதத்தில் சீன நிறுவனம் வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், இந்த ஆண்டுக்குள் அது செயற்படத் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது பூகோள பெய்டோ கடலோடல் சேவைகளை சீனாவுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பெய்டோ கடலோடல் முறையின் ஐந்தாவது வெளிநாட்டு பயனாளராக இலங்கை மாறியுள்ளது. இந்த உடன்பாட்டின்படி, பெய்டோ கடலோடல் முறையைப் பயன்படுத்தி இருநாடுகளும் மீன்பிடி, போக்குவரத்து, தகவல் சேகரிப்பு போன்ற விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதென்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment