Tuesday, May 7, 2013

வடக்கில் தேர்தல் நடக்க விடமாட்டோம் - சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அங்கு தேர்தல் நடைபெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே உள்ளோம். எமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த முயன்றால் அதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்குத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளது.

இதன்படி இம்மாத இறுதிக்குள் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக சிங்கள தேசிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளது என்றும் அறிய முடிகின்றது.

இது குறித்து தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட் டாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவிக்கையில், வடக்குத் தேர்தலை செப்ரெம்பரில் நடத்துவது நல்லதல்ல. நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கு தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே உள்ளோம்.

போரின்போது வடக்கிலிருந்து சுமார் 20 ஆயிரம் சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அங்கு மீள்குடியமர்த்தப்பட வேண்டும். அத்துடன் இவ்வாறு வடக்கில் இருந்து வெளி யேற்றப்பட்ட சிங்கள மக்கள் வட மாகாணத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு எமது இந்தக் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த முயன்றால் அதனை நாம் தடுத்து நிறுத்துவோம். இது தொடர்பாக நாம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இந்த வார இறுதிக்குள் அனுப்பவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment