Saturday, May 25, 2013

சுலபமாக கிடைத்த ஈழத்தை தவற விட்ட விடுதலைப் புலிகள்!

விடுதலைப் புலிகள் இந்திய - இலங்கை உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும். தனியான நிர்வாகத்தை கோருவதற்கு வசதியான 13 ஆவது திருத்தத்தை அவர்கள் அப்போது சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இவர்களுடைய இராணுவ ஆற்றல் மீதான மிகையான நம்பிக்கையும், திமிரும் தான் அவர்களை 1987 ஒக்ரோபரில் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரைப் பிரகடனம் செய்யத் தூண்டியது என்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நான் இந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தை எச்சரிப்பது எனது பொறுப்பு என்றும், இன்னமும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் தொடர்கின்ற சூழலில் அவர்களின் கைகளில் பொலிஸ் அதிகாரங்கள் கிடைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசு அனைத்துலக, உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து போகாமல் அரசாங்கம் 13 ஆவது திருத்தம் குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மாகாணசபை நிர்வாகம் ஈழத் திட்டத்தை தொடரக் கூடும். எனினும் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நாம் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ள நிலையில், மாகாண தேர்தல் நடத்துவது இன்னொரு போர்ச்சூழலை ஏற்படுத்துவதற்கான எமது முட்டாள்தனமான செயலாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 13 ஆவது திருத்தத்தின் குறைபாடுகள் தொடர்பாக அரசுக்கு எடுத்துக் கூறுவேன் என குறிப்பிட்ட அவர் அரசாங்கம் உடனடியாக 13 ஆவது திருத்தம் குறித்து பரந்தளவிலான விவாதங்களை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பாதுகாப்புக்கு பிரதான சவாலாக அமையக்கூடும் என குறிப்பிடடார்.

அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய பிரிவினைவாத எதிர்ப்பு விசாரணைகளில், தேர்தலின் பின் வடக்கில் உருவாகக்கூடிய முரண்பட்ட மாகாண நிர்வாகம் ஒன்று தலையிடக்கூடும் என குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com