Friday, May 17, 2013

மனநிலை பாதித்த தாய் குழந்தைகளை வீசியெறிந்தாள் கிணற்றில்! - தாண்டிக்குளத்தில் சம்பவம்

மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று இன்று (17) வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்திருக்கிறார். என்றாலும், அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர்சிகா (வயது 6) சன்சிகா (2 ½ வயது) மற்றும் நிதர்சிகா 1 ½ வயது) ஆகிய மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதை அவதானித்ததை அடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளிக்கையில் கூறியதாவது, 'கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்னர் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு இவர்கள் வாடகைக்கு குடியேறியிருந்தனர்.

இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகளுடன் 3 பெண்பிள்ளைகள் உள்ளனர். வறுமை காரணமாக நேற்றைய தினம் கிராம சேவகரின் உதவியை இவர்கள் நாடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவர்கள் தொடர்பில் கிராம சேவகரால் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகரிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில மணி நேரங்களின் பின்னர் இவர்கள் மீண்டும் வீடு திரும்பியிருந்தனர். ஆனால், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் என நாம் எண்ணவில்லை' என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜே.ஜயக்கொடியிடம் கேட்டபோது,'நேற்றைய தினம் கிராம சேவகரால் தாயொருவரும் 3 பிள்ளைகளும் பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் சிறுவர்களை சிறுவர் காப்பகம் ஒன்றில் அனுமதிக்குமாறும், தாயார் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தமையினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இக்குழந்தைகளின் தந்தையை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது தனது மூன்று பிள்ளைகளையும் காப்பகத்தில் விடுமாறும் அவரால் கோரப்பட்டதுடன் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்து தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

எனினும் பிள்ளைகளை அவர்களின் பாட்டியினுடைய வீட்டில் விடுவதற்கான ஒழுங்குகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு அவர்களது வீட்டிற்கு உளநல ஆலோசகர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அதிகாரியுடன் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் இவர்களை பொறுப்பேற்கவில்லை.

இவ்வாறான நிலையில் மீண்டும் நாம் சிறுவர் காப்பகத்தில் விடுதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். இருந்த போதிலும் இக்குழந்தைகளுக்கு பெற்றோர் இருப்பதனால் சிறுவர் காப்பகத்தில் அக்குழந்தைகளை அனுமதிக்க முடியவில்லை. எனவே நாம் தந்தையுடன் கலந்துரையாடி தாயாருடன் இவர்களது வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்திருந்தோம்' என தெரிவித்தார்.

இந்நிலையிலேயே இன்று காலை தாய் தனது மகனை பாடசாலைக்கு அனுப்பி விட்டு பெண் பிள்ளைகளை கிணற்றில் போட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com