Thursday, May 2, 2013

விமானம் மேலெழுந்து பறப்பது எப்படி

விமானம் காற்றை உந்தியும் பின்தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி ஆகும். இவ்வகையில் பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் 300 தொடக்கம் 500 வரையான மக்களையும் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000 தொடக்கம் 14000 மீற்றர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போக்குவரத்து ஊர்திகளாகும்.

சுமார் 1890 களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு வரை ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்னும் இரு உடன் பிறந்த சகோதரர்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி கொக் என்னும் இடத்தில் இப்புரட்சிகரமான நிகழ்வு நடந்தது. இந்த புகழ் மிக்க வானூர்தியின் வரலாறு மிகவும் விரிவானது.

வானூர்தி பறப்பது எப்படி என்பது மிகவும் புதுமையானதாகும். நான்கு விசைகள் வானூர்தியை பறக்க வைக்கின்றன. அவை ஏற்றம், எடை, உந்து விசை, இழுவை என்பனவாகும். ஏற்றம், வானூர்தியை மேலே உயர்த்துகிறது. காற்று வானூர்தியின் இறக்கைகள் மற்றும் வான் கட்டகத்தின் மேலாக நகரும் விதம், இறக்கைகள் வடிவமைப்பு வானூர்தியை மேலே உயர்த்துகிறது.

எடை, வானூர்தியை பூமியை நோக்கி இழுக்கிறது. வானூர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானூர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது. உந்து விசை வானூர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. இவ்வமுக்கத்தை உண்டாக்க பொறி பயன்படுத்தப்படுகிறது.

இழுவை, வானூர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் இழுவையை உணரலாம். காற்று வானூர்தியை தாண்டிச் செல்லுமாறும் அதனால் உண்டாகும் இழுவை குறைவாக இருக்குமாறும் வானூர்தி வடிவமைக்கப்படுகிறது. இந்நான்கு விசைகளும் ஒன்றிணைந்து செயல்படும் பொழுது வானூர்தி பறக்கிறது.

No comments:

Post a Comment