Thursday, May 30, 2013

அதிகார குரல் யாரை குத்தும்

ஆல் போல் தழைத்து அறுகுபோல் பெருகிவாழச் சொல்லி வாழ்த்துகிறார்கள் அல்லவா! ஆல் போல பெருவிருட்சமாகி விடுவதுதான் இயலாவிட்டால் போகட்டும், அறுகம்புல் போல உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு நமக்கு இன்றியமையாத் தேவையாகிறது.

அழிந்துவிடாமல் மீள்வதில் அறுகம்புல்லுக்கொரு ஆற்றல் உண்டு. ஏழுமுறை உழுதுழுது அதன் வேர்முனை ஈறாகப் பொறுக்கியெடுத்த பின்னும், மண்ணிடை நுணுங்கி மறைந்து கிடந்த அணுவளவு கணுவிலிருந்து அது மீண்டெழுந்து முளைத்து நிலம் மூடிப்படர்ந்துவிடும்.

தமிழ் மக்களுக்கு அந்த ஆற்றல் இயல்பாயமைந்தது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், தமிழ் மொழிக்கு அந்தத் தகவமைப்பு இருந்திருக்கிறது. வடமொழியின் பல்முனைத் தாக்குதலில் தமிழின் கிளைமொழிகளாகிய மற்ற திராவிட மொழிகள் யாவும் தேவநாகரி எழுத்தொலித் தாக்கத்தை உள்வாங்கி இணங்கிப் போயிருக்கின்றன.

தமிழ் மட்டும் காலமாற்றத்திற்கேற்ற தகவமைப்போடு தன் வேர்த்தன்மையை இழக்காமல் மக்களின் நாவில் காலத்தை ஊடறுக்கும் மொழியாகத் தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய எழுத்து வாழ்வையும் அது கொண்டிருக்கிறது. இவ்வளவு புராதனமான நீண்ட ஒரு பண்பாடு, இன்றைய பிரச்சினையில் எல்லாவற்றையும் கறுப்பு-வெளுப்பாய் மட்டுமே எப்படிப் பார்க்க முடிகிறது?

மறுபக்கத்தை மறைத்து வெறுத்து விரோத நிலையில் வைத்துக்கொண்டு, தனது பக்கத்தை மட்டும் ஒரே வாய்பாடாக உருப்போட்டுக் கொண்டும் ஒற்றைத் தேசிய உருவாடியபடியும் இருப்பது எங்ஙனம்? கண் மூடி எதிர்ப்பதும் அல்லது கண்மூடி ஆதரிப்பதும் என்ற இரு நிலைப்பாடுகளுக்கிடையில் நம்மை இறுக்கிக் கொண்டிருப்பதை எப்படித்தான் விளக்க முடியும்?

இப்படி பன்மைத்துவத்தை மறுத்து ஒற்றைப்படையான சிந்தனைக்குள் மனிதர்களை மாட்டுவிக்கும் ஒரு கலாசாரம் எப்படித் தற்காலப் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும்? உலகின் சமகாலப் போக்கிற்குள் எப்படிப் பொருந்திக் கொள்ளும்? தன்னை எப்படிப் புதுப்பித்துக் கொள்ளும்? தன்னை எப்படி விமர்சித்துக் கொள்ளும்? தன்னை விமர்சிக்க சக்தி இல்லாத கலாசாரம் உயிருடன் இருக்க முடியுமா?

நம் சமூகத்திற்கென்று பிரத்தியேகமாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு குணாம்சம் இதற்குக் காரணமோ என்று தோன்றுகிறது. நம்மை அறிவுச்சமூகமாகச் சொல்லிக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறவர்களிடம் மரபாயிருந்து வரும், மற்றவர்களைச் சமமாய்க் கருத மறுக்கும் போக்குதான் அது. இவ்வாறு சிலர் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவுரீதியான மேலாதிக்கமும், மற்றோரைக் கீழ்நிலைப்படுத்தி அவர்கள் மீது அதிகாரம் செலுத்த விரும்பும் மனோபாவத்தையே கொண்டிருக்கிறது. நான் இந்த சமூகத்தின் மதிப்புக்குரிய உயர்ந்த பிரஜை. எனவே நான் சொல்வதையே கேள்! என்கிற அதிகாரக் குரலைத் தன்னிடம் வைத்திருக்கிறது.

இவர்கள்தான் நமது சமூகத்திற்காக, மக்களுக்காகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதுதான் நமது பிரச்சினையில் அவிழ்க்க முடியா முடிச்சாக தொடர்ந்து வதையளித்துக் கொண்டிருக்கிறது. இவர்களிடமிருந்தும், இவர்கள் உருவாக்கி அளிக்கும் சிந்தனையிலிருந்தும் மீண்டு வந்தே, இன்றைய பிரச்சினைக்கும் எமது மக்களின் துக்கங்களுக்கும் விடை தேடியாக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com