வடக்கு தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் - தேர்தல் கண்கானிப்பு நிறுவனங்கள்!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது,
தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமாக ஒன்றுக் கூடக் கூடிய உரிமையை எடுத்துக் கொண்டாலும் வடக்கின் பல பகுதிகளிலும் அந்த உரிமையும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் மக்கள் கூடினால் எதற்காக கூடுகின்றார்கள் என்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். இராணுவ மயப்படுத்தல் மிகவும் முக்கியமான பிரச்சினையாக நீடிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஏனைய எந்தவொரு பிரதேசத்தை விடவும் வடக்கில் அதிகளவான துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சதுர மீற்றருக்கான படைவீரர்களின் எண்ணிக்கையின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட நிலையில் சுயாதீனமான முறையில் தேர்தல் நடாத்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment