Friday, May 10, 2013

வாக்காளர் பதிவு விசேட ஏற்பாட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட அல்லது தகுந்த காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வாக்காளர் பதிவு விசேட ஏற்பாட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் சட்டமூலத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். வடமாகாணத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும், ஆவணங்களையும் கைவிட்டு நாட்டின் வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது உரிய காரணங்களுக்காக இடம்பெயர்ந்த வடமாகாண மக்கள் தமக்குரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு விடுத்த கோரிக்கை நடைமுறையிலுள்ள சட்டம் காரணமாக தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

எனினும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் பொதுமக்கள் தமக்குரிய தேர்தல் தொகுதியில் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இதன்மூலம் பொதுஜன வாக்குரிமை எனும் மக்களின் இறைமையை பாதுகாக்க முடியும். சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் குடியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்ககூடியவாறு வாக்காளர் பெயர்ப்பட்டியலொன்றையும் தயாரிக்க முடியுமென நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment