Wednesday, May 22, 2013

தண்ணீரென மண்ணென்னையைக் குடித்த குழந்தை மரணம்!

தண்ணீரென நினைத்து மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுப் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கல்மடு நகரைச் சேர்ந்த வரதராஜா சங்கவி (1வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சம்பவ தினமான கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குறித்த குழந்தையின் தாய் வெளியே சென்றுள்ளார். தந்தையார் வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். குழந்தையின் சகோதரர்கள் விளையாடுவதற்காக வெளியில் சென்றுள்ளனர்.

இந் நிலையில் குழந்தைக்கு தாகம் ஏற்பட்டமையினால் சமயலறைக்குச் சென்று குடிதண்ணீர் என எண்ணி மண்ணெண்ணை ஊற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய போத்தலை எடுத்து அருந்தியுள்ளது. பின்னர் வெற்று மண்ணெண்ணைப் போத்தலை எடுத்துக்கொண்டு சென்று உறங்கிக் கொண்டிருந்த தந்தையின் மீது குழந்தை எறியவே திடுக்கிட்டு எழுந்த தந்தை மண்ணெண்ணைப் போத்தலை அவதானித்த போது குழந்தை மயங்கி விட்டது. உடனடியாகக் குழந்தையை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழந்தை அழைத்துவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆயினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதித் திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com