Friday, May 17, 2013

கிளிநொச்சியில் 6,170ற்கும் அதிகமான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 பெண்கள் போராலும் ஏனைய அனர்த்தங்களாலும் விபத்துக்களாலும் கணவனை இழந்த நிலையில் பல்வேறு துன்ப, துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மீளக் குடியமர்த்தப்பட்ட பின் இவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இக் குடும்பங்களில் வசிக்கின்ற குழந்தைகளும் சிறுவர்களும் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கான தேவைகள் என்பனவும் பூர்த்தி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளன.

இதேவேளை எமது மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல இடம்பெற்றுவருகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவங்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாகவுள்ளன.

பெண் என்பவள் சமூகத்தில் தங்கையாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக போன்ற பல நிலைகளில் முக்கியம் பெற்று விளங்குகின்றாள். இதனால் பல்வேறு சமூக சவால்களை பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக எமது மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் எமது மாவட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பிரதேச, மாவட்ட மட்டங்களில் உத்தியோகத்தர்களை நியமித்துள்ளோம். ஆனால் இவர்களால் இப்பிரச்சினைகளைத் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குச் சமூக மட்டத்திலுள்ள அனைத்துச் தரப்பினரும் முன்வரவேண்டும்.

இந்த வகையில் எமது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு அற்ற நிலையே காணப்படுகின்றது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகமும் ஜேர்மன் அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த வேலைத்திட்டமானது எங்களுடைய மக்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இது போன்ற சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட செயற்றிட்டங்களை எதிர்காலத்திலும் முன்னெடுக்கவேண்டும். அதனூடாகவே எங்களுடைய பெண்களுக்கு போதிய விழிப்புணர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com