Friday, May 10, 2013

தனித்து வாழும் 6 மற்றும் 9 வயதுச் சிறுவர்கள்!

வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த 9 வயது மற்றும் 6 வயதுள்ள இரு சகோதரர்களை பொலிஸாரும் சிறுவர் பராமரிப்பு பணியகமும் மீட்டெடுத்த சம்பவமொன்று பதுளை, வினீதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சிறுவர்களின் தாய் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிற்றூழியராக பணியாற்றி வருகின்றார். தந்தை தொடர்பில் தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

9 வயதான சிறுவன், விடியற்காலை 5 மணிக்கு எழுந்து 6 வயதான தனது சகோதரருக்காக உணவு சமைத்து பரிமாறிவிட்டு தானும் உண்டு, பின்னர், சுமார் ஒன்றரை மைல் தொலைவில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்பைப் பற்றவைப்பதற்குக்கூட உயரமற்ற மேற்படி சிறுவன், சிறு கதிரையொன்றை வைத்து, அதன் மீதேறி அடுப்பைப் பற்றவைத்தே உணவு சமைத்து வந்துள்ளார்.

இவர்களின் தாய், தனது பிள்ளைகளுடன் இருப்பதற்காக பதுளைக்கு இடமாற்றம் கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொழும்பிலிருந்து பதுளைக்குச் செல்லும் அவர், பிள்ளைகளுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய பொருட்களை வாங்கி வைத்துவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுவர்கள் தொடர்பில் அயலவர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், அச்சிறுவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். இச்சிறுவர்கள் இருவரையும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment