Saturday, May 4, 2013

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . . (இறுதிப் பாகம் 5)

எனதருமை தமிழ்நாட்டுச் சகோதர, சகோதரிகளே !

சிந்திக்கும் திறன் மிக்கவர்கள் நீங்கள். சகல வளங்களும் கொழிக்கும் நாடு உங்களுடையது. இன்று சர்வதேச அளவிலே பெயர் பெற்று விளங்குவது சென்னை நகரம். அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டிய உங்கள் புனித பூமியையும் இரத்தக்களரி ஆக்க முனையும் சில வேலையற்ற வீணர்களின் முயற்சிக்கு நீங்களும் துணை போகப் போகிறீர்களா?

ஈழத்திலே தமிழ்ப்பகுதிகளில் நியாயமான உரிமைப் போராட்டமாக ஆரம்பித்த போராட்டத்தை இனவாதமான போராட்டமாக உருமாற்றுவதில் வெற்றி கண்ட சில வீணர்கள் இன்று அதே இரத்தக்களரியை உங்கள் தேசத்திற்கும் ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருப்பதை உணர மறந்து விட்டீர்களா? அன்றித் தமிழ் மொழி மீது கொண்ட காதலை வெறியாக்கும் பணியில் இறங்கியிருக்கும் புலம்பெயர் புலிப்பினாமிச் சகோதரர்களின் வலையில் சிக்கி விட்டீர்களா?

தமிழ் வாழ வேண்டும், தமிழ் மக்கள் வாழ வேண்டும். அனைத்து மக்களும் சுயமரியாதையுடன் வாழும் நிலை வளர வேண்டும். இதனோடு மாற்றுக் கருத்துக் கொண்டவனல்ல நான்.

ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று தொடங்கிய போராட்டத்தின் உண்மையான இலக்கைத் தவற விட்டு தமது சுயலாபத்திற்காக இளம் ஈழத் தமிழ்ச் சிறார்களின் உயிரைப் பயணம் வைத்த "தமிழிழ விடுதலைப் புலிகளும் " அதன் தலைவரான மறைந்த "பிராபகரனும்" விட்டுச் சென்ற எச்சங்களின் நேரத்தைப் போக்காட்டும் பணிக்காக ஏன் உறவுகளே ! உங்கள் வாழ்வைப் பயணம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஈழத் தமிழ் மக்களின் வாழ்விற்கு இப்போ தேவையானது எது என்பதைச் சிந்திக்கும் வேளை இது. இந்தச் சிந்தனை ஓட்டத்திலே யதார்த்தமாக அவர்கள் அடையக்கூடிய இலக்குகளைப் பற்றிச் சிந்தித்து அதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு உந்துதல் கொடுக்கக்கூடியதே உங்களால் செய்யக்கூடிய பயனுள்ள உதவிகள்.

தமிழீழம் எனும் ஒரு நாட்டை தமிழருக்காக ஈழத்தில் உருவாக்குவதே நிறைவேறக்கூடிய விடயம் எனும் பாங்கில் ஒருவேளை நீங்கள் இப்புதைந்து போன கொள்கைக்கு உயிர் கொடுக்க முனைந்தால் உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் திசைதிருப்பிப் பின்னோக்கிப் பாருங்கள்.

தாம் பிறந்த மண்ணிலே தமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் துணிந்து தமது வாழ்வைப் பணயம் வைத்துப் போராடிய மாற்று இயக்கத் தோழர்களையே அம்மண்ணில் வாழவதற்கு அனுமதிக்க மறுத்தவர்களின் வழித்தோன்றல்களா ? மாற்றுத் தேசத்திலே பிறந்த தமிழருக்கு அந்நாட்டில் உரிமை கொடுக்கப் போகிறார்கள் ?

தாம் தனிநாடு கோரும் நாட்டிலே கால் பதிக்கக் கூட முடியாத இப்புலம்பெயர் புலிவாதிகள் எப்போது ? எப்படி ? இப்போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் ?

ஒன்றை மட்டும் என் உடன் பிறப்புகளே உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்புலித் தலைவருடன் கைகோர்த்து எத்தனையோ இளம் ஈழத்தமிழ்ச் சிறார்களின் வாழ்வைச் சுறையாடியவர்களே இன்று ஈழத்தின் தமிழ்ப்பகுதிகளிலே இலங்கை அரசின் ஆசியுடன் அமோகமாக வியாபாரங்களை விஸ்தரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதேநேரம் புலம்பெயர் தேசங்களிலே இப்புலிவாதத்தை பிரசாரம் செய்து கொண்டு தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொண்டு இயங்குகிறார்கள்.

இவர்களைக் காப்பாற்றப் பொகிறார்களா ? இல்லை ஈழத் தமிழ்ப்பிரதேசங்களிலே கண்டு கொள்ளப்படாமல் கலாச்சார சீரழிவுகளுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் அவ்விளம் தலைமுறைகளின் வாழ்வைச் சீராக்கிக் கொள்ளும் வழிவகைகளை சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுத்த உங்களது இந்திய அரசாங்கத்திற்குத் துணை நிற்கப் போகிறீர்களா ?

சரித்திரத்தில் ஈழத்தமிழரின் சுபீட்சத்திற்கு நீங்கள் எவ்வகையில் பங்காற்றியிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் திறன் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஏக்கத்தில் என் மண்ணின் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வைச் சிதைப்பதற்குத் துணை போனவர்கள் என்றில்லாமல் சீரமைக்க உதவியவர்கள் என்று பெயரெடுப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன், உங்களது அன்பு நிறைந்த சகோதரத்துவ ஆதரவிற்கு எனது சிரந்தாழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு இம்மடலை நிறைவிற்கு கொண்டு வருகிறேன்.

நான் துரோகியல்ல !

தினமும் என் கண்முன்னே எனது நாட்டு மக்கள் படும் அவலத்தைக் கண்டு இப்போது சிறிய நிம்மதிப் பெருமூச்சு விடும் அவர்களது நிம்மதி பறிபோகக்கூடாது எனும் ஆதங்கம் நிறைந்தவன்.

ஈழத்திலிருந்து
நல்லையா குலத்துங்கன்
(நிறைவுற்றது)

இக்கடிதத்தின் சகல பாகங்களும் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment