Thursday, May 16, 2013

சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ. 2000 மில்லியனை மீள அறவிடாத நிதிக்கொடையாக வழங்க புதிய திட்டம்!

சுற்றுலா பயண துறைசார் நடுத்தர, சிறிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு அரிய வாய்ப்பு இலங்கையின் சுற்றுலா மற்றும் சுற்றுலாக் கைத்தொழில்சார் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 2000 மில்லியன் ரூபாவை மீள அறவிடாத நிதிக் கொடையாக வழங்குவதற்குப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய நிலையான சுற்றுலா அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக வறுமையற்ற இலங்கையை நோக்கி என்ற தொனிப்பொருளிலான இவ்வேலைத்திட்டம் இன்று 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலாப் பணிப்பாளர் ஏ. பி. எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் உல்லாச பயணக்கைத்தொழில் மற்றும் சுற்றுலா துறைசார் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் 2000 மில்லியன் ரூபா மீள அறவிடப்படாத நிதியாக வழங்கப்படவிருக்கின்ற போதிலும் 5000 மில்லியன் ரூபா மேலதிக முதலீட்டை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

உல்லாச ஹோட்டல்களாயின் ஐம்பது அல்லது அதற்கு குறைவான அறைகளையும் வருடத்திற்கு நூறு மில்லியனுக்கு குறைவான மொத்த வருமானத்தையும் ஈட்டும் நிறுவனங்களும், உல்லாச ஹோட்டல் அல்லாத சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளாயின் நூறு மில்லியன் ரூபாவையும் ஈட்டும் நிறுவனங்களும் இந்த நிதிக்கொடையைப் பெற விண்ணப்பிக்க முடியும் எனக்குறிப்பிட்ட அவர் இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை மக்கள் வங்கியின் கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் எனக்குறிப்பிட்டார்.

இவ்விண்ணப்பப் படிவங்களை பூர்த்திசெய்து எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதிக்குள் நீங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்ற வங்கிக் கிளைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இங்கு முன்வைக்கப்படும் வேலைத் திட்டத்திற்கு ஏற்படுகின்ற செலவில் 50 சதவீதத்தை முதலிடுவதற்கு விண்ணப்பத்திற்குரிய நிறுவனம் தகுதியைப் பெற்றிருப்பதும் அவசியம். அப்போது இதர 50 சதவீதம் மீள் அறவிடப்படாத நிதிக்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com