இலங்கையில் கடந்த ஆண்டு 20 பேர் பலவந்தமாக காணாமற் போயுள்ளனர்!
இலங்கையில் கடந்த ஆண்டில் இருபது பேர் பலவந்தமாக காணாமற் போயுள்ளதாக லண்டனைத் தலைமையகமாக கொண்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமற்போனவர்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடங்கியுள்ளனர்.
இலங்கையில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும், அதிகார துஷ்பிரயோகம், மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூட வலியுறுத்தும் நீதித்துறையினரும் அச்சுறுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் 2013ம் ஆண்டுக்கான அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, காணாமற்போதல்கள் என்பன தொடர்வதாகவும், இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை.
பொறுப்புக்கூறல் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பரிந்துரைகளையோ நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment