Saturday, May 18, 2013

மே - 18 வெற்றி நாளா? சமாதானத்திற்கான நாளா?

இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திரமும், சுதந்திரத்திற்கு பின்னர் சிந்திய இரத்தமும்.

ஆங்கிலேயர் இம்மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் இந்த அழகிய சின்னஞ்சிறு தீவு பல இராச்சியங்களாக விளங்கியது. இதில் பிரதானமாக கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்பன விளங்கின. யாழ்ப்பாண இராச்சியத்திற்கு கட்டுப்பட்டதாகவும், சில சமயங்களில் சுயாதீனமாக பலம் பெற்றதாகவும், தனித்துவமானதாகவும் வன்னி இராச்சியம் விளங்கியது. வன்னி மக்களை தமது ஆளுகைக்கு உட்படுத்த இறுதி வரை முடியாதிருந்ததாக இந்நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் குறிப்பேடு ஒன்று சான்று பகிர்கின்றது.

7ஆம் நூற்றாண்டு தொடங்கி 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பலம்பெற்றிருந்த சோழ இராச்சியத்தின் ஒரு பகுதியாக இலங்கை தீவானது மும்முடி சோழ மண்டலம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரையை சேர்ந்த பாணர் என்ற யாழ்பாடிக்கு பரிசளிக்கப்பட்ட ஒரு பூமியாக யாழ்ப்பாணம் விளங்குவதாக வரலாறு குறிப்பிடுகின்றது. நெடுந்தீவு முற்காலத்தில் மணிபல்லவம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பிரதேசமே பல்லவ சாம்ராச்சியத்தின் தோற்றுவாய் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழரின் வரலாற்றில் ஆண்ட கதைகளும்; ஏராளம், மாண்ட கதைகளும் ஏராளம். உலகில் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் படைத்தவனும் தமிழன் தான். தமிழர் தம் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக போருக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இறந்த வீரர்களுக்கு நினைவு சின்னங்கள் எழுப்புவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் தமிழ் மரபில் முக்கியமான ஒன்றாகும்.
மகாபாரதத்தில் ஸ்ரீPகிருஷ்ணரால் தர்மத்தினை காக்க ஒரு யுத்தம் நடத்தப்பட்டது. பரிசுத்த வேதாகமத்தில் ஒரு வசனம் வருகிறது. இரத்தம் சிந்தாமல் சமாதானம் இல்லை என்பதுவே அதுவாகும்.

எமது நாடு இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திரத்தை இந்நாட்டின் தலைவர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். கடந்த 30 வருட யுத்தத்தில் சிந்தப்பட்ட இரத்தமானது அடையப்பட்டுள்ள சமாதானத்திற்கான ஒப்பற்ற விலையாகும். அப்படியானால் மே - 18 நாளின் முக்கியத்துவம் என்ன? ஒரு இனத்தை மற்றொரு இனம் வெற்றி கொண்ட நாளா? இது வெற்றி நாளா? இல்லவே இல்லை. இந்த நாட்டில் சிறுபான்மை இனமொன்று பெரிய அளவில் உயிர் கொடை செய்த இறுதி நாள்.

எனவே மே 18 இனை சமாதானத்திற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும். இதனை இந்த யுத்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஒரு ஆத்மசாந்தி பிரார்த்தனை நாளாக நினைவு கூரவேண்டும் என்பதே போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் ஏகோபித்த வேண்டுகோளாக உள்ளது. இந்த மே 18 இனை அரசாங்கம்; வெற்றி நாளாக கொண்டாடுவதை நிறுத்தி எமது கோரிக்கைகளுக்கு அமைவாக யுத்;தத்தில் இறந்த அனைத்து மக்களுக்குமான நினைவு சின்னம் ஒன்றை நிறுவி, இறந்துபோன அனைத்து உயிர்களுக்கும் பொதுமக்கள், போராளிகள் என்ற வேறுபாடு பாராமல் ஆத்ம சாந்தி பிரார்த்தனை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து இறந்த உறவுகளை நினைத்து அம்மக்கள் ஒப்பாரி வைத்து அழுது மனச்சுமைகளை இறக்கி வைக்கவும் இறந்த ஆன்மாக்களை சாந்திப்படுத்தவும் நினைவு கூரவும் வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மாறாக இதனை ஒரு வெற்றி நாளாக கொண்டாடுவதன் மூலம் யுத்தத்தை வெறுத்து புத்த பெருமானின் போதனைகளை ஏற்று தமது அரசுரிமை வரீசுகளான மகிந்த தேரரையும், சங்கமித்தையையும் காவியுடை தரித்து துறவறம் பூணச்செய்து இலங்கைக்கு அனுப்பி இலங்கைத்தீவை ஒரு சமாதான பூமியாக்க விரும்பிய மகாசக்கரவர்த்தி அசோகரது தூர நோக்கினையும் புத்தபெருமானின் போதனைகளையும் பின்பற்றி கொண்டிருக்கின்ற இலங்கை மக்களுக்கு நற்செய்தியை சொல்லும் நாளாக இந்த மே - 18 நாள் தொடர்ந்தும் அமையாது என்பNது எமது கருத்தாகும்.


நன்றி
இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

1 comments :

Anonymous ,  May 18, 2013 at 2:23 AM  

புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com