Wednesday, May 8, 2013

150 ஆண்டு கால மனிதாபிமான சேவையாற்றும் செஞ்சிலுவைச் சங்கம்!


ஹென்றி டுனான்ட் என்பவரால் உருவாக்கப்பட்டதே செஞ்சிலுவைச் சங்கம். 1828 மே 08 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் ஜெனீவாவில் பிறந்த இவர் வர்த்தக நோக்கமாக 1859 ஆம் ஆண்டு இத்தாலிக்குப் போகும் போது இத்தாலியின் வடக்கு எல்லையில் சொல்பரினா என்னும் இடத்தில் பிரான்ஸ்க்கும், ஆஸ்திரியாவுக்கும் சண்டை மூண்டது.


சண்டையில் 40,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் காயப்பட்டும் இறந்தும் காணப்பட்டனர். இவர்களுக்குத் தேவையான மருந்து, முதலுதவி என்பன வழங்கப்படாத காரணத்தால் இந்நிலைமை ஏற்பட்டது. இதனை கண்ணுற்ற ஹென்றி டுனான்ட் உடனடியாக அவர்களுக்கு உதவி செய்வதற்காக பல தொண்டர்களை இணைத்து முதலுதவியும் மருத்துவ உதவியும் வழங்கி பலரைக் காப்பாற்றியிருந்தார். இக்காட்சி அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

எனவே, 1862 ஆம் ஆண்டு போர் காலங் களில் தான் கண்ட காட்சியை வைத்து சொல்பரினா நினைவுகள் (Memory of Solferina) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பமாவதற்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றது. 1863 இல் செஞ்சிலுவைச்சங்கம் உருவாகியது. இதில் இரண்டு விடயங்கள் முக்கியம் பெற்றது.

1. காயப்பட்டவர்களை கவனிக்க தொண்டர்கள் இணைக்கப்படல் வேண்டும்.
2. இத்தொண்டர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்க சர்வதேச சட்டங்களை ஏற்படுத்தி, சர்வதேசம் அவற்றை அங்கீகரிக்க வேண்டும்.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 16 நாடுகள் இணைந்து செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கியன.

இன்று 191 நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கம் ஜெனீவாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இச்சங்கத்தின் கொடியின் செஞ்சிலுவையானது ஜெனீவா நாட்டின் தேசியக் கொடியின் சிவப்பு பின்னணியில் உள்ள வெள்ளைச் சிலுவையை வெள்ளைப் பின்னணியில் சிவப்பு சிலுவையாக மாற்றி அமைத்து உருவாக்கப்பட்டது. இதுதான் உலகளவில் காணப்படும் நடுநிலைமையுடன் செயல்படும் செஞ்சிலுவையின் அடையாளமாகும்.

செஞ்சிலுவைச் சங்கம் மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றது.
1. செஞ்சிலுவைச்சங்க சர்வதேசக் குழு - ICRC
2. தேசிய செஞ்சிலுவையின் சங்கங்கள் - N.S
3. சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் - IFRC

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழு - ICRC
1863 ஆம் ஆண்டு ஹென்றி டுனான்ட் அவர்களால் ஆரம்பிக் கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆயுத மோதல்கள் உள்நாட்டு கலகங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக உலக நாடுகளினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட நடுநிலைமையான சுயாதீன மனித நேய அமைப்பாகும்.

இது ஆயுத மோதல்களில் பல்வேறுபட்ட அமைப்புக்களால் வழங்கப்படும் சர்வதேச நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும். அதோடு துன்பப்படும் மக்களுக்கு சர்வதேச உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதிப்படுத்துகின்றது.


சிறுவர்களை போரில் பயன்படுத்துதலை மிக வன்மையாக கண்டிக்கும் இவ்வமைப்பு எல்லைப் போர், உள்நாட்டு யுத்தங்கள், இனக்கலவரங்கள் என்பவற்றையும் வன்மையாக பக்கச் சார்பில்லாமல் கண்டிப்பதால் சர்வதேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் ஒரு நிறுவன மாக மதிக்கப்படுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன் போர்க்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச நியமனங்களைப் பற்றி வலியுறுத்தும் அமைப்பாகும். இன்று போர்க்காலங்களின் தன்மை மாறி வருகின்றது.

புதிய ஆயுதங்கள் பயன்படுத்தல், பாதிக்கப்படும் மக்களின் அளவு அதிகரித்து வருதல் என்பன காரணமாக, இந்த அமைப்பின் செயற்பாடு முன்பு ஒரு போதும் இல்லாதளவு சிக்கலாகியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் சர்வதேச செஞ்சிலுவைக் குழு போரில் மிகவும் கணிசமாக செயற்பட்டு வந்தது.

இன்று 92 நாடுகளில் 13000 ஊழியர்களுடன் செயற்படும் ஓர் அமைப்பாகும்.

தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள், செம்பிறைச் சங்கங்கள் - N.S
உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் இயக்கமான செஞ்சிலுவை செம்பிறைச் சங்கங்கள், அனர்த்த நிவாரணம், சுகாதாரச் சேவை, சமூக சேவைகள், பலதரப்பட்ட மனிதாபிமானச் சேவைகள், அரசுக்கு துணையாக அதனது சொந்த நாட்டிலே செய்கின்றது. அதனது கொள்கைகளைப் பலப்படுத்த தேவையான வலைப்பின்னல் அமைப்புகொண்ட மனிதாபிமான இயக்கம் ஒன்றாக இது உள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களின் சமாசம் - IFRC
1919 ஆம் ஆண்டில் இச்சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. தேசிய சங்கங்களினால் ஜெனீவாவில் 191 நாடுகள் கையொப்பமிட்டு உருவாக்கப்பட்டதாகும். இது இன, மத வர்க்கம் ஆகிய வேறுபாடு இன்றி மிகவும் பாதிக்கப்பட்ட மக்களது நிலைமைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம். தனது நிவாரணப் பணிகள் ஊடாக தேசிய வளங்களைப் பலப்படுத்துகின்றது.

இச்சங்கங்கள் யாவும் மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுயாதீனம், தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சர்வதேச மயம், என்று முக்கிய ஏழு கொள்கையின் அடிப்படையிலே செயற்படுகின்றன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
1932 ஆம் ஆண்டு மலேரியா நோயை கட்டுப்படுத்த பிரித்தானியாவால் இலங்கை அரசாங்கத்துக்கு உதவுவதாக உருவாக்கப்பட்டது. 1948 இல் சுதந்திரத்திற்கு பின்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என 1949 இல் உருவாகியது. 1952 இல் சர்வதேச செஞ்சிலுவை செம்பிறைச் சங்கத்துடன் இணைந்தது.

1972 இல் இலங்கை செஞ்சிலுவை என பெயரிட்டு செயல்படத் தொடங்கியது. செயல்பட்டு வருகின்றது. இவற்றின் சேவைகள், முதலுதவிப் பயிற்சி, முதலுதவி சேவை, அடிப்படை சுகாதார சேவை, மனிதனால் இயற்கையால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுக்கு நிவாரணம் வழங்கல், இரத்ததான முகாம், நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தல், சமூகங்களுக்கு எயிட்ஸ் பற்றி பாதுகாப்பு விழிப்புணர்வு ஊட்டல், அனர்த்தத்துக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதற்கு பயிற்சி அளித்தல், அடிப்படை ஏழு கொள்கைகளை பரப்புரைகளை, செய்தல் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையிலும் உதவி செய்தல், சுனாமி வீட்டுத்திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகள் புனரமைப்பு என்பன போன்ற பல்வேறு நிவாரணத்தினை செய்து வருகின்றது.

யாழ்ப்பாண செஞ்சிலுவைச் சங்கம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்களின் மாவட்ட கிளையாக இது இயங்கி வருகின்றது. இது தேசிய அடிப்படையில் செயற்படும் எல்லா நிவாரணப்பணிகளிலும் செயலாற்றுகின்றது. குறிப்பாக கூறும் போது யுத்தகாலங்களில் யாழ். மாவட்டத்தில் இருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் இரவு, பகல் 24 மணித்தியாலம் அம்புலன்ஸ் சேவை யாழ். மக்களால் மறக்க முடியாதது.

அத்துடன் முகாம்களில் இருந்த மக்களுக்கு நிவாரணம், மருந்து வசதிகள் வழங்கப்பட்டன. முகாம்களுக்கு வெளியில் வைத்தியசாலைகள் இல்லாத இடங்களில் 2012 வரை நடமாடும் வைத்திய சேவைகள் செய்யப்பட்டன. இது ICRC உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு மேலாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம், வடமராட்சியில் 2000 வீடுகளுக்கு மேல் அமைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலை புனரமைக்கப்பட்டது.

மேலும் இன்று இந்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் 17500 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்தில் 8000 வீடுகளை அமைக்க நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. தெல்லிப்பளை, சாவகச்சேரி, நெடுந்தீவு ஆகிய உதவி அரசாங்க பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை மற்றும் மனித செயற்கை அழிவுகளால் பாதிப்புறுவோர்களின் நலன்களை மனிதாபிமான அடிப்படையில் சாதி, சமய வர்க்கம், பால், இன மொழிப்பாகுபாடின்றி சேவை செய்வதே செஞ்சிலுவைச் சங்கங்களின் குறிக்கோளாகும். செஞ்சிலுவைச் சங்கங்களின் பலம் அதன் மிகப்பரந்த தொண்டர்களின் சக்தியாகும்.

கு. பாலகிருஷ்ணன்

செயலாளர்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்,

யாழ். கிளை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com