Friday, May 17, 2013

பங்களாதேஷ் தாக்கியது மகாசென்’ 11 பேர் உயிரிழப்பு; 10 இலட்சம் பேர் நிர்க்கதி,

பங்களாதேஷில் ‘மகாசென்’ சூறாவளித் தாக்கம் காரணமாக 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றுமாலை மகாசென் சூறாவளி பங்களாதேஷ் கரையைக் கடக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததையடுத்தே 10 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

பங்களாதேஷின் சிட்டங்கோங் மற்றும் கோக்ஸ் பஜார் ஆகிய மாவட்டங்களில் சூறாவளியால் 40 இலட்சம்பேர் பாதிக்கப்படும் அச்சம் காணப்படுவதாக ஐ.நா. சபை அறிவித்திருந்தது. இதற்கமைமாக 15 மாவட்டங்களிலுள்ள 10 இலட்சம் பேர் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நேற்றுக்காலை 8 மணிக்கு பங்களாதேஷின் பட்டுக்கஹலி மாவட்டத்தைத் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் இங்கு சூறாவளி தாக்கியதுடன் மாலை பங்களாதேஷின் ஊடாக கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தரையைக் கடக்கும் போது இதன் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர் முதல் 120 கிலோ மீற்றராகக் காணப்படும் என பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

நேற்றுக் காலை பங்களாதேஷின் சில கரையோர மாவட்டங்களை சூறாவளி தாக்கியதில் 11 பேர் தாங்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் உடைந்து வீழ்ந்ததினால் உயிரிழந்ததாக பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளியுடன் பங்களாதேஷின் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மகாசென் சூறாவளி தாக்கும் அச்சுறுத்தல் காரணமாக பர்மாவிலும் ஆயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்து பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இச்சூறாவளி காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளில் 80 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com