Monday, May 6, 2013

100% மின் கட்டணங்களை அதிகரித்தவர் பிரேமதாச!

சஜித் பிரேமதாசவின் தகப்பனார் ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த போது மின் கட்டணங்களை 100 வீதம் அதிகரித்தார்.அவ்வாறே அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மின் கட்டணங்களை 43 வீதமாக அதிகரித்ததாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் மின்சாரக் கட்டணத்தை 100 வீதம் அதிகரித்த ஒரே அரசு ஐ. தே. கட்சியாகும். நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற குறைந்த செலவிலான மின் திட்டங்கள் ஐ.தே.க. காலத்தில் இருந்தே உத்தேசிக்கப்பட்டிருந்தன.பல்வேறு காரணங்களால் சிலர் எதிர்க்கும் போது அரசியல் ரீதியாக நஷ்டம் ஏற்படுமென கருதி அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டைப் பற்றிக் சிந்தித்து சகல சவால்களுக்கும் பயமின்றி முகம் கொடுத்து மின் திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.2014ல் 100 வீதமாக நாட்டுக்கு மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நுரைச்சோலையின் இரண்டாம், மூன்றாம் கட்ட மின் நிலையங்கள் இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் திறக்கப்படும்.அதன் மூலம் தேசிய மின் திட்டத்தில் 600 மெகாவட் மின்சாரம் சேர்க்கப்படும்.

500 மெகாவாட் கொண்ட சாம்பூர் மின்சாரத் திட்டமும் புரோட்வன்ட்ஸ் மின் திட்டமும் இவ்வருடம் ஆரம்பமாகும்.குறைந்த செலவிலான மின் உற்பத்தித் திட்டத்துக்கு இணங்க மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் இது அமுலாகிறது.நாட்டின் எதிர்கால நன்மைக்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன.ஆர். பிரேமதாஸ ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் மக்களின் மின்சார ‘பில்’களை அதிகரித்தது மட்டுமன்றி, நாட்டில் 60,000க்கு மேற்பட்ட இளைஞர்களையும், யுவதிகளையும் சித்திரவதை செய்து கொன்று மின்கம்பங்களில் தொங்க வைத்து போட்டிருந்தனர். சூரியகந்தைக்கு நாம் சென்று அந்நாட்களில் தோண்டி வெளியே எடுத்தது அந்தச் சடலங்களைத்தான்.

சஜித் பிரேமதாசவின் தகப்பனாரின் காலத்தில் கொன்று புதைத்துப் போட்டவர்களின் சடலங்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆஸ்பத்திரிகளிலும் இன்றும் காணக்கிடைக்கின்றன.சஜித் பிரேமதாஸ இன்று இந்தச் சடலங்கள் வெளியே எடுக்கப்படும் குழிகளின் அருகில் சென்று அந்த எலும்புக்கூடுகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தொடர்ந்து தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com