Thursday, April 11, 2013

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள தொடர்புகள் கேளீர்!

சர்வதேசத்தில் உள்ள புலிகளையும், முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிக்க கூட்டமைப்பு சதி செய்கிறதா?

இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளின் தலைமையையும், புலிகள் போராளிகளையும் பொறுப்பு எடுக்க தவறியதன் மூலம் இறுதிக்கட்டத்தில் ஏராளமான தமிழ் மக்களும், புலிப்போராளிகளும், விடுதலைப்புலிகளின் தலைமையும், தமிழரின் போராட்டமும் அழிந்து போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதித்திட்டம் தான் காரணமாக இருந்தது என்று நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், தமிழ் மக்களை மீளமுடியாத நிரந்தர அழிவுக்குள் இட்டுசென்றுவிடப்போகிறது என்பதே எமது பெருங்கவலையாக உள்ளது.

22 பாராளுமன்ற உறுப்பினர் பலம் இருந்தபோது கூட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் அழிவுச்சமரில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு வீரமரணம், தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டது.

நாம் முன்பும் கூறினோம், தொடர்ந்தும் கூறி வருகிறோம். ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது. இது தமிழ் மக்களின் அவலத்தை காரணம் காட்டி நடைபெறும் சர்வதேச அரசியல் வியாபாரம் இதனை தந்திரமாக கையாளத்தவறினால் பூமராங் போல இது தமிழ் மக்களையே திருப்பித்தாக்கும் என்றோம். அரசாங்கத்தை நோக்கி வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டும் முன்னாள் புலிகளையும், யுத்த வலயத்திலிருந்து மீண்டுவந்த மக்களையும் ஏன் ஒவ்வொரு தமிழனையும் பாதிக்கும் என்று கூறி வைத்தோம். ஆனால் இப்போது நடப்பது என்ன? புனர்வாழ்வு பெறாத சகல போராளிகளையும் இனங்காணும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. கிளிநொச்சியில் உள்ள மக்கள் இதனால் பீதியடைந்துள்ளார்கள்.

இப்படி ஒன்று நடைபெற்றால் சர்வதேசம் தலையிடும் என்றும், அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் நாடகம் ஆடக்கூடும். கூட்டமைப்பினராகிய உங்களை நோக்கி நான் கூறுகிறேன் உங்களினதும், சர்வதேசத்தினதும் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு எமது மக்கள் பலிக்கடாவாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு அலுவலகம் இருக்கிறது. அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான பிரிகேடியர் சகி என்பவர் பணிப்பாளராக இருக்கிறார். 'வெரைட்டி ரிசர்ச் பிரைவேற் லிமிடெட்' என்பது அந்த நிறுவனத்தின் பெயராகும். அரசியல் தொடர்பான ஆலோசனைகளை பணத்திற்கு விற்பனை செய்யும் மேற்படி முகவர் நிறுவனத்துடன் தமிழ்த்; தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கும், கள்ளத்தொடர்புகளுக்கும் என்ன காரணம் என்று போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். இராணுவப்புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய நிறுவனத்தில் நீங்கள் தொடர்பு வைத்து ஆலோசனை பெறுவது எதற்காக? தமிழ் மக்களை காப்பாற்றவா? அல்லது, தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து உங்கள் பதவிக்கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளவா?

இனியும் இரட்டை வேடம் போட்டு தமிழ் மக்களை ஏமாற்றினால் உங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவோம்.


நன்றி
இவ்வண்ணம்
உண்மையுள்ள,
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

No comments:

Post a Comment