நிசாந்தனுக்கு அடித்தவர்கள் யார்? கண்டுபிடியுங்கள்.. அங்கஜன் பொலிஸில் முறைப்பாடு.
யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன், தான் நேற்று முன்தினம் கொழும்பு சென்றிருந்தபோது வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு இறைச்சிக் கடை ஒன்றின் பின்னால் வைத்து தாக்கப்பட்டதாக இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அங்கு தனது பின்முதுகில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக காட்டிய நிசாந்தன் இத்தாக்குதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கைநெட் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த நபர் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன் எனத் தெரிவித்த அங்கஜன், நிசாந்தனது இக்குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் இதனால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை ஈடுசெய்ய ஆவன செய்ய வேண்டும் என்றும் யாழ் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையங்களில் சற்று முன்னர் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நான் இங்கு ஒருவிடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நிசாந்தன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் தன்மீது தாக்குதல் மேற்கொண்டதாக எந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவில்லை. இதிலிருந்து இவர் சுய பிரச்சாரத்திற்காக ஊடகங்களை தவறாக வழிநடாத்துகின்றார் என்பது புலனாகின்றது என்றார் அங்கஜன்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் : நிசாந்தன் ஒர் ஈபிடிபி உறுப்பினர். அக்கட்சி சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாநகர சபைக்கு தெரிவானவர். பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள விரும்பினார். இணைத்துக் கொண்டோம். கட்சியின் உறுப்புரிமையை வைத்துக்கொண்டு ஏற்கனவே பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களிடம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கி பணம் அறவிட்டுள்ளார். இவ்விடயம் கட்சியின் தலைமைக்கு யாழ் மக்களால் தெரியப்படுத்தப்பட்டது. விசாரணைகளை நடாத்தினோம். இவர் பணம் பெற்றமை நிருபணமாகியது. இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் நகர சபை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியிலிருந்தும் விலக்கினோம். தற்போது மிகவும் வெறுப்படைந்தவராக காணப்படுகின்றார். தொடர் பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார். இவ்வாறான கீழ்தரமான அரசியல் செய்வதை விடுத்து அல்லலுறும் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாண்மையை வழர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment