Tuesday, April 9, 2013

பத்திரிகை நண்பர்களே? புறாக்களாக இருக்காதீர்கள். வி.சகாதேவன்

கடந்த மாதம் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார். 03.04.2013 அன்று உதயன் அலுவலகமும் விநியோக வாகனமும் கிளிநொச்சியில் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் சவால் என்றும் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் நாம் தொடர்ந்து அறிக்கை விட்டுகொண்டிருப்பதில் பயனில்லை. இனி நாம் செயற்பாட்டிற்கு இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இவ்வாறான சம்பவங்கள் உணர்த்துவது போல் தெரிகிறது.

நாம் எமக்கு ஒரு ஆபத்து நேரிரும் போது அறிக்கை விட்டாயிற்று எம்முடைய அறிக்கையும் ஒரு பத்திரிகையில் வந்துவிட்டது எம்முடைய கடமையும் முடிந்துவிட்டது என்று சும்மா குந்திக்கொண்டிருக்க முடியாது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தமைக்காக இதுவரை பல ஊடகங்கள் நசுக்கப்பட்டிருக்கின்றன. புல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையைப் பொறுத்த வரை தமிழ் ஊடகங்களில் உதயனுக்கு ஒரு சிறப்பான பங்கு உண்டு. தமிழரின் பாரம்பரிய பூமியான யாழ் மண்ணிலிருந்து வெளிவரும் உதயனுக்கு சிறப்பான வாசகர் வட்டமும், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் ஒரு பத்திரிகையை அழித்துவிடலாம் என்று நினைப்பவர்கள் உண்மையிலேயே தோற்றுப்போவார்கள்.

இச்சம்பவத்தை போரால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கண்டிக்கின்ற அதேவேளை பத்திரிகை நண்பர்களுக்கு மத்தியில் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பத்திரியை நிருபர்களை தேனிக்களுக்கு ஒப்பிடுவார்கள். அப்படியானால் உங்கள் பத்திரிகை அலுவலகம் தேனிக்கூட்டிற்கு ஒப்பானது. உங்கள் செய்திகள் தேனுக்கு ஒப்பானவை

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கூட்டுக்குக் கல் எறிந்தவனை தேனிக்கள் எவ்வாறு இனங்கண்டு தாக்குமோ அதுபோல் உங்கள் பேனா என்னும் கொடுக்குகளால் உங்கள் எதிரிகளை ஈவிரக்கமின்றி தாக்குங்கள, புறாக்களைப்போன்று செய்திகளை கொண்டு சேர்த்த நீங்கள் கழுகாக மாறுங்கள், தூர இலக்குகளை அவதானிக்க தொடங்குங்கள், உங்களுக்கு பலம் முக்கியமில்லை தந்திரம் தான் முக்கியம், எனவே நீங்கள் இப்போது நாரிகளாக மாறுங்கள்.

'காலாள் களரில் நரியாடும் கண்ணஞ்சா,வேலாள் முகந்த களிறு'

என்ற குறளுக்கு அமைய செயற்படுங்கள். அதாவது, 'பெரும் போர்களை வெற்றிகொண்டு வேற்படைகளையெல்லாம் எதிர்த்து துவம்சம் செய்த படை யானையானது, ஒரு நாள் நரிக்கு இரையாகும். எப்படியென்றால்! சகதி நிறைந்த களர் நிலத்தை அது கடக்கும் போது அதன் கால்கள் அந்த சேற்றில் புதைந்து யானையால் நடக்க முடியாமல் போகும். அவ்வேளையில் பசியுடன் வரும் தனித்த ஒரு நரி அந்த யானையை வேட்டையாடி தனது பசியை போக்கிக்கொள்ளும்.

எனவே நீங்கள் புறாக்களாக மட்டும் இருக்காதீர்கள், தேனிக்களாகவும், கழுகுகளாகவும், நரிகளாகவும் மாறுங்கள். உங்கள் எதிரி தோற்று, புறமுதுகிட்டு ஓடுவதை உங்கள் கண்ணெதிரே காண்பீர்கள்.

நன்றி

இவ்வண்ணம்
உண்மையுள்ள,
வி;சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.

No comments:

Post a Comment