‘சிங்கள மத அமைப்பை தடைசெய்வதற்குத் தான் ஒருபோதும் அமைச்சரவைக்கு ஆவணமொன்றும் கொணர மாட்டேன்’ என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பௌத்த மத சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர், சிங்கள மத அமைப்பைத் தடைசெய்வதற்கு வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கவுள்ளார் என குற்றம் சுமத்தியதனால், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிங்கள மத அமைப்பைத் தடை செய்வதற்குத் தான் ஒருபோதும் அமைச்சரவைக்கு எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க மாட்டேன். என்றாலும் குரோதத்தையும், வன்மத்தையும் வளர்கக்க்கூடிய மத மற்றும் இனங்களிடையே பிளவினை ஏற்படுத்தக்கூடிய எழுத்து மற்றும் வாய்மொழி பிரசுரங்களையும், பிரச்சாரங்களையும் தடை செய்வதற்கு அமைச்சரவை ஆவணமொன்றை அமைச்சரவைக்கு வெகு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
எந்தவொரு தனிநபரும் அமைப்பொன்றை அமைப்பதற்கும், அதனை வழிநடாத்துவதற்கும் ஜனநாயக உரிமையுண்டு. அமைப்புக்களை தடைசெய்யுமாறு நான் ஒருபோதும் கோர மாட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment