வலி வடக்கு கிழக்கு காணி சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த வாரீர். பகிரங்க அழைப்பு.
வலிகாம் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த 23 வருடங்களாக மீள் குடியேற்றப்படாமலிருக்கும் மக்களது காணிகள் பறிபோகும் நிலையிள்ளபோது, இந்த நிலைமையை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிச்சைக்காரன் கை சிரங்கு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்தக்காணிகள் தொடர்பில் ஆங்காங்கே அறிக்கைகளை விடுத்தாலும் அவை ஊடக விளம்பரத்திற்காகவே அமைந்திருந்ததை கண்டுள்ளோம். இந்நிலையில்வெளிப்படையான உண்மையானதோர் போராட்டத்திற்கு வருமாறு பொதுமக்களுக்கு பதிகரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளது போரினால் பாதிக்கப்பட்ட மக்களமைப்பு.
அது விடுத்துள்ள அழைப்பு வருமாறு.
வலி வடக்கு -வலிகிழக்கு காணி சுவீகரிப்பை உடன் தடுத்து நிறுத்த, போராட வருமாறு அழைப்பு விடுத்து – ஒரு பகிரங்க மடல்.
1990ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு ஆனி மாதம் 12ஆம் திகதி முதன் முதலாக வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் ஒரு சில பகுதிகளில் இருந்த தமிழ் மக்கள் 2ஆம் கட்ட ஈழப்போராட்டத்தினை ஆரம்பிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் தென்மராட்சி, வடமராட்சி வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு இடம் பெயர வைக்கப்பட்டனர். அதே 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் வலிகாமம் வடக்கின் முழுப்பகுதிகளும் காங்கேசந்துறை துறைமுகம், பலாலி இராணுவத்தளம் ஆகியவற்றின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தீபாவளி தினத்தன்று பறித்தெடுத்து தமிழ் மக்களை வலி வடக்கிலிருந்து முழுமையாக விரட்டியடித்து துயரத்தை தீபாவளி பரிசாக வழங்கினார்கள்.
கடந்த 23 வருடங்களாக இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறி சென்றவர்களை தவிர மீதிப்பேர் முகாம் வாழ்க்கையினையும், ஓரளவு வசதி படைத்தவர்கள் வாடகை குடியிருப்பாளர்களாகவும் இதுவரை வசித்து வருகின்றார்கள். யாழ்குடா நாட்டின் 10மூ நிலப்பரப்பை கொண்ட வலி வடக்கின் அரைவாசிக்கு மேற்பட்ட அதாவது 6,500 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரித்துள்ளது. இது யாழ் மாவட்டத்தின் அதிக செழிப்பான விவசாய காணிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். அதனையும் விட ஒட்டுமொத்த இலங்கைக்கான மீன் உற்பத்தியில் அதிகூடிய பங்களிப்பு செய்த மயிலிட்டியும், அதனை சூழ்ந்த வளமான கடற்கரை பிரதேசமும் இதனுள் அடங்குகின்றது.
குடாநாட்டு மக்களின் வாழ்விடப் பரப்பளவில் 10மூ வலிகாமம் வடக்கில் அடங்குகின்றது. யாழ்குடா நாட்டின் செழிப்பான விவசாய நிலப்பரப்பில் 50% க்கு மேல் இப்பகுதியிலேயே உள்ளது. யாழ்குடா நாட்டின் கடல்வள வருமானத்திலும் ஏறத்தாள 75மூ க்கு மேல் வலிகாமம் வடக்கு பிரதேசம் பங்கள்ப்பு செய்துள்ளது. இப்பகுதி காணிகள் சுவீகரிக்கப்பட்டதன் மூலம் பலாலி விமான நிலையம், காங்கேசந்துறை துறைமுகம், இரயில் நிலையம் என்பவற்றினால் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் வலிகாமம் வடக்கு மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பொருளாதார நலன்களும் இன்று சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுவிட்டது.
எனவே இதனை தட்டிக்கேட்காமல், தடுத்து நிறுத்தாமல் நாம் நமது உரிமையைப்பற்றி பேசுவதில் எள்ளளவும் பயன் இல்லை. வலிகாமம் மக்களின் காணி சுவீகரிப்பு செய்யும் அரசாங்கத்தின் நோக்கத்தினை நாம் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக வலிகாமம் வடக்கின் சமூக பிரதிநிதிகளிடம் உடனடியாக பேசி ஒரு முடிவிற்கு வரும்படி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். கடந்த 23 வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் வலிகாமம் வடக்கு மக்களின் துயரங்களை செவிமடுத்து உரிய தீர்வு ஒன்றை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
1983 இல் வெலிஓயா, 2003 இல் வலிகாமம் என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். கடந்த மூன்று தசாப்த காலமாக மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தமிழர் விடயத்தில் மட்டும் தீங்கிழைத்தல் என்ற ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வருவதையே இது காட்டுகிறது. வலி வடக்கு மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தொடர் போராட்டத்தினை நடத்துவதற்கு வலி வடக்கு மீள் குடியேற்றக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அழைப்பினை அனைவரும் ஏற்று 29.04.2013ஆம் திகதி காலை 8.00 மணிக்கு வலி வடக்கு பிரதேச செயலகத்தில் ஒன்றுகூடுமாறும், இறுதித் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்வதற்கு அணிதிரளுமாறும் அனைவரையும் அழைக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
உண்மையுள்ள,
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
24.04.2013
0 comments :
Post a Comment