முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தலைமைகள்! வெட்கத்தில் முகம் கவிழும் முஸ்லிம் தலைமைகள்!! -எஸ்.ஹமீத்-
'ஒன்னுமே புரியலே உலகத்திலே..
என்னமோ நடக்குது-மர்மமா இருக்குது...
ஒன்னுமே புரியலே உலகத்திலே...'
இந்தப் பழைய திரைப்படப் பாடல்தான் இலங்கை நிலவரத்தை அவதானிக்கும் போது நினைவிற்கு வருகிறது.
அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் அரசியற் தலைமைகள் தமது பதவி சுகம் கருதி வாய் பொத்தி மௌனிகளாக இருக்க, தமிழ் மக்களின் அரசியற் தலைமைகள் தமது சொந்த சோகங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிலைமையினைப் பார்க்கும் எவருக்கும் மேலே குறிப்பிட்ட சந்திரபாபுவின் பாடல் (இந்தப் பாடலை ஒரு முறையாவது இரசித்திருந்திருந்தால்) நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததே.
முஸ்லிம்கள் என்றும் இஸ்லாம் என்றும் மேடைகளில் முழக்கமிட்டு அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை நயவஞ்சகத்தனமாகக் கவர்ந்து அமைச்சர் பதவிகளையும் பிரதி அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் இன்று ஆழ்ந்த உறக்கத்துக்குள் அமிழ்ந்திருக்க, 30 வருடங்களுக்கும் மேலாகத் துயரக் கடலில் தத்தளிக்கும் தமிழ் சமூகத்தின் விடிவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்கள், பாராளுமன்றத்திலே தமக்கு ஒதுக்கப்படுகின்ற பொன்னான நேரங்களைத் தமிழ் மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல், அந்த அரிய நேரங்களை முஸ்லிம் மக்களின் அவலங்களை எடுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவர்களை நினைத்துப் பெருமையும் நமது தலைவர்களை நினைத்து வெட்கமும் துக்கமும் அடைய வேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மிக அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றில் நிலைத்து நிற்கும் என நான் நம்புகிறேன். உணமைதான்; இந்த நாட்டில் அடக்கியாளப்படும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசமிக்க உரைக்கு முன்னால், வீணே வேசம் போடுகின்ற நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் துச்சமாகப் போய்விட்டார்கள் வெறும் துரும்பாய், தூசியாய் ஆகி விட்டார்கள்.
பன்றியின் முதுகில் அல்லாஹ் என்று எழுதி ஒரு கூட்டம் ஊர்வலம் போனபோது, எந்த கொந்தராத்தில் எவ்வளவு சுருட்டலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்-அல்லாஹ்வின் உருவ பொம்மை செய்து அதை அந்தக் கூட்டம் இழுத்துச் சென்று எரித்த போது, எந்த ஹோட்டலில் தனது மகளின் திருமணத்தை எடுப்பாக நடாத்தலாமென்று இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருந்தவர்கள்-சந்திகள் தோறும் பொதுக் கூட்டம் போட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி அந்தக் கூட்டம் பேசிக்கொண்டிருந்த போது, எந்த நாட்டிற்குச் சென்று இளைப்பாறி இன்பம் காணலாமென்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள்- எமது ஹலால் உணவைப் பறிப்பதற்கு அந்தக் கூட்டம் முழு வேகத்துடன் முயன்ற போது, தமது வங்கி இருப்பை இன்னும் எந்த வழிகளில் அதிகரிக்கலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்- எமது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, எந்தப் பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை என்று ஈனத்தனமாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர்கள்- எங்கள் சகோதரிகளின் பர்தா உடைகள் காடையர்களினால் இழுத்து வீசப்பட்ட போது, தமது பெண்டாட்டிகளுக்குப் பட்டுப் புடவைகளைக் கொள்வனவு செய்து கொண்டிருந்தவர்கள்-எமது சகோதரர்களின் தொப்பிகள் கழற்றி எடுக்கப்பட்டுக் கால்களின் கீழ் போட்டு மிதிக்கப்பட்டபோது கண்கள் மூடிக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்தவர்கள் சம்பந்தன் ஐயா அவர்களின் பாராளுமன்ற வீர முழக்கத்தில் வெட்கமடைந்து முகம் கவிழ்ந்து போயிருப்பார்கள் என்பது நிச்சயம். என்ன செய்வது..? இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகள்தான் நமது சமூகத்தின் பிரதிநிதிகளாக நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை என்னும் போது இதயம் கசிந்து இரத்தம் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.
மானமிழந்து-மரியாதை இழந்து-உரிமை இழந்து-உணர்வுகள் இழந்து-சூடிழந்து-சுரணையிழந்து ஆளும் கட்சியில் இருப்பதை விட, தன்மானத்துடனும் சுய மரியாதையுடனும் எதிர்க் கட்சியில் இருந்து எமது உரிமைகளுக்காகவும் கௌரவத்துக்காகவும் போராடுவதுதான் சிறந்தது.
இத்தனை இழப்புகளையும் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் பிரதான அரசியற் தலைமை சோரம் போகாத அரசியலில் தாக்குப் பிடித்து நிற்பதிலிருந்தாவது நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டாமா...? அதனால்தானே இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா..? தமிழ் மக்கள் பிரச்சினைகள் மீதான இன்றைய உலகளாவிய கவனத்தின் காரணமாகவே அச் சமூகத்தின் மீதான நெருக்குவாரங்கள் ஓரளவாவது நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா...?
தமிழ்-முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று அடிக்கடி சம்பந்தன் ஐயா வலியுறுத்தி வருவதானது அவரது ஆழ்ந்த-தெளிந்த அரசியல் அனுபவத்தையே காட்டி நிற்கின்றது. இந்த நாட்டிலுள்ள இரு பிரதான சிறுபான்மைச் சமூகங்களும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம், இரு சமூகங்களுக்கும் நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பது சுலபமாகுமென்பதே எனது கருத்துமாகும். .
1 comments :
தமிழ்-முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
சிறுபான்மைச் சமூகங்களும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம், இரு சமூகங்களுக்கும் நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பது சுலபமாகும்.
தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலங்களை விட்டு, மக்களின் நலன்களுக்காக ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டிய காலம் வந்து விட்டது.
Post a Comment