Wednesday, April 10, 2013

இலங்கைக்கு மேலாக சூரியன் உஷ்ண நிலை வடக்கு

நாடெங்கிலும் வெப்பநிலை மக்களால் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை சூரியன் இலங்கைக்கு மேலாக நிலை கொண்டிருப்பதால்தான் உஷ்ண நிலை இந்தளவு மோசமடைந்துள்ளது. வெப்ப நிலையினால் சரும ரோகங்கள், வியர்க்குரு போன்றவற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் உடல் முழுவதும் வியர்க்கும் போது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

வெப்பத்தின் தாக்கத்தை ஈடுகொடுக்க வேண்டு மாயின் மக்கள் கூடுதலான திரவ உணவை உண்ண வேண்டுமென்றும் இவை எல்லாவற்றிலும் சுத்தமான நீரை அதிகமாக பருகுவதே வெப்பத்தை சம நிலைப்படுத்துவதற்கு பேருதவியாக அமையுமென்று சமூக வைத்தியத்துறையின் பேராசிரியர் ரோஹினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தண்ணீருடன் இளநீர், பழவர்க்கங்களை பிழிந்து குடித்தல் போன்றவை உடலில் நீர்த்தன்மை குறையும் தாக்கத்தை ஈடுசெய்யக்கூடியதாக இருக்குமென்றும் அவர் கூறினார். மார்ச் மாதம் 21ஆம் திகதியன்று சூரியன் பூமத்திய ரேகையின் மேலாக இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து ஏப்ரல் 5ஆம் திகதியன்று இலங் கைக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. ஏப்ரல் 7ஆம், 8ஆம் திகதிகளில் சூரியன் கொழும்பு மாநகரை கடந்து நகருமென்றும் ஏப்ரல் 14ஆம் திகதியன்று சூரியன் வட பகுதிக்கு நகர்ந்துவிடு மென்றும் வளிமண்டல ஆய்வுத்திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அவதானிப்பு அதிகாரி மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நுவரெலியாவுக்கு செல்பவர்களுக்கு நோய்கள் ஏற்படலாம் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஏப்ரல் விடுமுறைக் காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதனால் நுவரெலியா நகரமே மிதமிஞ்சிய தூசியின் தாக்கத்தினால் பாதிக்கப்படுகின்றது.

இது அங்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு காய்ச்சல், தும்மல் போன்ற நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. ஆகவே நுவரெலியாவுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com