எதிர்வரும் மாதங்களில் மாகாண சபைத்தேர்தல்கள் நடாத்தப்படும் என அரச தலைவர் அறிவித்ததும் அதை தொடர்ந்து இனவாதிகளால் வெளியிடப்படும் முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு தமிழ் மக்களின் மாகாண சபைகளை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் மாகாண சபைத்தேர்தல்கள் சரியான தருணத்தில் நாடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்..
வடக்கு தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று இப்போதைக்கு நடத்தக்கூடாது என்றும், 13ஆம் திருத்தத்தை வழங்குவது தனி ஈழத்தை தாரை வார்ப்தற்கு சமனானது என்றும் சிங்கள பிற்போக்கு சக்திகளிடமிருந்து வந்த செய்தி மூலமும், கடந்த வாரம் பௌத்த பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி மூலமும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
13வது திருத்தம் என்பது தமிழ் மக்கள் இழந்த இழப்புக்களாலும், சிந்திய இரத்தத்தின் மூலமும், செய்த தியாகங்கள் மூலமும் முழு நாட்டிற்கும் கிடைத்த ஒரு நன்கொடையாகும். இதன் மூலம் சிங்கள மக்களுக்கும் ஒரு அதிகார பகிர்வு கிடைத்தது என்றால் மிகையாகாது.
13வது திருத்தத்தை இன்னும் மேம்படுத்தி 1310 திருத்தத்தை வழங்குவேன் என்று அரசாங்கமும், இந்நாட்டின் ஜனாதிபதியும் பலமுறை கூறிவந்த நிலையில் கடும்போக்கு வாதிகள் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு கால் நுற்றாண்டு காலத்திற்கு பிறகு அதன் ஒரு பகுதியையாவது தமிழ் மக்கள் பயன்படுத்த இயலாத வகையில், தமிழ் மக்களை ஜனநாயக சூழலுக்குள் செல்ல முடியாத நிலையில் தடுக்கும் வகையில் செயற்படுவதனையும், கருத்துக்கள் கூறுவதையும் போரால் பாதிக்கப்பட்டு துயரங்களை சுமந்துள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவ்வாறான கருத்துக்கள் இன நல்லிணக்கத்தை நிச்சயம் சவப்பெட்டிக்குள் திணித்து குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானதாகும்.
வடமாகாணசபை தேர்தலை தள்ளிப்போடுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இந்தியாவிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வசிப்பவர்களும் இங்கு வந்து மீள்குடியேற, வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டு வலி வடக்கு, கொக்கிளாய், போன்ற, தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இன்னும் பல பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்யப்படாத தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவாக உள்ளனர். இதனை விடுத்து தமிழ் மக்களின் தியாகத்தாலும், உதிரத்தாலும் உருவாகிய மாகாணசபையினை பறிப்பதற்கும், செயலிழக்கச்செய்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. இவ்வாறான இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் பிற்போக்கு அடிப்படை வாத சக்திகளை ஜனாதிபதி முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்பதே போரால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி
இவ்வண்ணம்
உண்மையுள்ள,
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.
No comments:
Post a Comment