சோமர்செட் மாமின் கதை ஒன்று. ஒரு இளைஞன் மாதா கோயிலுக்குச் சென்று தனக்கு வேலை கேட்டான். மாதா கோயிலில் மணியடிக்கும் வேலையில் அவனை நியமித்தார்கள். சம்பள நாள் அன்று அவனைப் பதிவேட்டில் கையொப்பமிடச் சொன்னபோது தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றான். அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்.
அவன் அதே ஊரில் சிறு பெட்டிக்கடை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறிப் பெரிய பணக்காரனாகிவிட்டான். பெருந்தொழிலதிபராகிவிட்ட அவனைப் பேட்டிகாணப் பத்திரிகையிலிருந்து வந்தார்கள். அவர்களது கேள்விகளின் போது தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதையும் அவன் சொன்னான். ஆச்சரியப்பட்ட அவர்கள், எழுதப் படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய ஆளாகியிருக் கிறீர்களே... நீங்கள் மட்டும் படித்திருந்தால் எப்படி ஆகியிருந் திருப்பீர்கள்? என்றனர்.
ஒன்றுமில்லை. மாதா கோயிலில் மணியடிப்பவனாக இருந்திருப்பேன்! என்றான் அந்தப் பணக்காரன். நல்ல பள்ளிக்கூடத்தில் சேருவது முதல், வேலை அல்லது வியாபார முயற்சிகள் வரை வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் மற்றவர்களுடன் போட்டியிட்டு முதல் வரிசையில் இடம் பிடிக்கிறவர்களே முன்னேற முடியுமென்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. வெற்றி பெறப் போட்டிகள் அவசியமில்லை என்று பீற்றர் தியல் கூறுகிறார்.
இவரும் எல்லாப் போட்டிப் பரீட்சைகளும் எழுதி எழுதி வென்று, கடைசியில், உச்ச நீதிமன்ற வேலைக்கான தகுதிகாண் பரீட்சையில் தோல்வியுற்றவர். அத்துடன் பரீட்சைகள் எழுதுவதை விட்டுவிட்டு பேபால் என்ற இணையத்தளத்தை நிறுவினார். ஃபேஸ்புக் நிறுவனத்திலும் வேறு பல தொழில் நுட்ப நிறுவனங்களிலும் பங்குகளை மலிவாக வாங்கிப் போட்டார். அதனால் இன்று ஒரு கோடீஸ்வரராகி இருப்பவர். உச்ச நீதி மன்றத்தில் பதவி கிடைக்காமல் போனதால் கிடைத்த பலன் இது என்கிறார்.
போட்டி கடுமையாக இருக்கும்போது போட்டியில் கலந்து கொள்ளாமலிருப்பதே நல்லது என்று தியல் கூறுகிறார். அதைவிடப் போட்டிகள் இல்லாத அல்லது குறைவாக இருக்கிற களங்களில் இறங்கிச் சிறு சிறு வெற்றிகளையும் சாதனைகளையும் எட்டுவது மேலானது. பல்லாயிரம் பேருடன் போட்டியிட்டு முதலிடத்தை எட்ட முயலுவதைவிட ஒரு புதுப்புனைவான செயல்திட்டத்தை உருவாக்கி அதில் முதலிடத்திற்கு வருவது சிறப்பு என்பது தியலின் கருத்து.
தற்காலப் போட்டிச் சூழல் படைப்பியல் திறன்களை மழுங்கடிப்பது மட்டுமன்றி தோல்விகள் இளைய தலைமுறையினரிடம் தற்கொலைக்குக்கூடத் தூண்டிவிடும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஒரு மாணவன் பரீட்சையில் முதலிடம் பெறும் முயற்சியில் எல்லாப் பாடங்களிலிருந்தும் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கிறான். நேரப்பங்கீடு செய்து கொண்டு பழைய கேள்வித் தாள்களிலிருந்தும், துணை நூல்களிலிருந்தும் கேள்விகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து கூடிய புள்ளிகள் வாங்கும் போட்டியில் இறங்குகிறான். அறிவை விட வெற்றியே முக்கியமானதாகிறது. மாணவர்கள், எல்லோரும் விரும்பும் துறைகளிலேயே தாங்களும் சேர்ந்து படிக்க விரும்பாமல், தங்களுக்குப் பிடித்த துறை எதுவோ அதை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்து வெல்வது தான் புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு துறையில் தோல்வியடைவது தற்கொலைக்கு உகந்த காரணமல்ல. வெற்றியடைய வேறு பல துறைகள் உள்ளன. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?
No comments:
Post a Comment