Tuesday, April 16, 2013

தெற்காசியாவில் மிகப் பெரிய வரி மோசடி குற்றவாளிகள் மூவருக்கு தண்டனை

தெற்காசியாவின் பெரிய வற்வரி மோசடியாகக் கருதப்படும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் நடைபெற்ற 357 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட மூவருக்கு 10கோடியே 10 இலட்சத்து 50,000 ரூபா அபராதமும் 33 மாத கடூழிய சிறைத்தண்டனையும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க விதித்துள்ளார்.

வற்வரி மோசடி வழக்கில் 10ஆம், 13ஆம், 14ஆம், ஆகிய குற்றம் சுமத்தப்பட்ட சின்னையா சுப்ரமணியம், முஹமட் ரிஸ்மி, சஹாப்தீன் அப்துல்லா ஆகிய மூவரும் சிறைத்தண்டனையும், அபராதப்பணத்தை செலுத்தவில்லையானால் தற்போது அரசின் பொறுப்பிலுள்ள அவர்களின் சகல ஆதனங்களையும் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி சட்டமா அதிபருக்கு அறிவித்தார்.

இந்த மோசடியால் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய நிதி போலி வழி மூலம் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே இவர்களின் சொத்துகளைஅரசுடமையாக்கி அந்தப் பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு வழக்கின் முறைப்பாட்டை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனெக அலுவிகாரே நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

இக்காரணங்களை பரிசீலித்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் ஏழு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இடப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நீதிமன்றத்தில் இவ்வாறான இலகு தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

2002, 2004 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு வரவேண்டிய 357கோடி ரூபாவை ஆடை ஏற்றுமதி நிறுவனமாக பதிவு செய்து போலி நிறுவனத்தின் பெயரால் பணத்தை விடுவித்தமை அப்பணத்தை முறையற்ற விதத்தில் பாவித்தமை உட்பட பல குற்றங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் குற்றப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கின் முடிவில் 10ஆவது எதிரிக்கு 13மாத கடூழியச் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபா அபராதமும், 13ஆவது எதிரிக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 இலட்ச ரூபா அபராதமும், 14ஆவது எதிரிக்கு 08மாத கடூழியச் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

ஊடகங்களில் இந்த மோசடி பற்றி செய்தி வெளியானதும் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் இன்ஸ்பெக்டர் பீ. விஸ்வநாதன் உட்பட பொலிஸ் அதிகாரிகளின் குழு பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்தது. எஇதனைத் தொடர்ந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி வரி ஆணையாளர், உதவி வரி ஆணையாளர் ஆகியோர் கைதாகினர். குற்றம் சுமத்தப்பட்டோர் நாட்டை விட்டு செல்வதற்கு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டது. இருந்தும் குற்றம் சுமத்தப்பட்ட பலர் வெளிநாடு சென்றிருந்தனர்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் இறைவரி ஆணையாளர் ஆனந்த அம்பேபிட்டிய, உதவி ஆணையாளர் ஞானசிரித சொய்ஸா உட்பட 14பேர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் குற்றம் சுமத்தப்பட்ட 8 பேரில் ஆறு பேருக்கு எதிராக மட்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலி ஆவணங்களைத் தயாரித்து 20 போலி நிறுவனங்களின் பெயரில் 235 காசோலைகள் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.இவ்வழக்கில் முதலாம், இரண்டாம் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பரிசீலிப்பதை நீதிபதி இம்மாதம் 30ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com