Wednesday, April 24, 2013

ஆபாசத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!(எஸ்.ஹமீத்)

செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள், தமிழ் உரிமைக்கான குரல்கள் சார்ந்த ஆக்கங்கள் எனத் தரமான விடயங்களைத் தருகின்ற இந்த இணையத் தளங்களிற் சில, ஆபாசம் மிக்கதும் அருவருப்பானதுமான பின்னூட்டங்களை வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும்.

வாசகர்களின் பின்னூட்டங்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிடும் இந்த இணையத் தளங்கள் அதன் தரமான நல்ல வாசகர்களையும் தான் சார்ந்த தமிழ்ச் சமூகத்தையும் வெட்கித் தலை குனிய வைப்பதை முதலில் உணர வேண்டும்.

தரமான ஒரு செய்திக்கு வழங்கப்படும் தரங்கெட்ட விமர்சனங்களை வாசகர் உரிமை என்ற வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆண்-பெண் அந்தரங்க உறுப்புகளின் பெயர்களை அப்பட்டமாகக் கூறியும்- அம்மா, அக்கா, தங்கையென இழுத்து ஆபாசம் நிறைந்த கேவலமான சொற்றொடர்களைப் பாவித்தும்-இதற்கு மேலதிகமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைக் கூறியும்-எழுதப்படுகின்ற பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுகின்ற இந்த இணையத் தளங்கள் தமது நோக்கங்களைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் மீள் பரிசீலனை செய்வது அவசியம்.

தமிழ் வாசகர்களை முஸ்லிம் வாசகர்கள் சகிக்க முடியாத வார்த்தைகளால் வர்ணிப்பதும், அவ்வாறே முஸ்லிம் வாசகர்களைத் தமிழ் வாசகர்கள் தூஷிப்பதும் உடனடியாக நிறுத்தப் படவேண்டுமென்பதே சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை விரும்பும் நல்ல வாசகர்களினதும் புத்திஜீவிகளினதும் விருப்பமாகும்.

இது தவிர பின்னூட்டங்களை பெண்கள், ஆண்கள், ஏன்... சிறுவர் சிறுமியர்கள் கூடப் பார்வையிடுகிறார்கள். காமத்திலும் இனத் துவேஷத்திலும் முங்கியெடுத்து வழங்கப்படும் அவ்வாறான பின்னூட்டங்கள் இத்தகு பெண்கள், சிறுவர், சிறுமியர் மீது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சமூக அக்கறையோடு எண்ணிப் பார்த்து, அவற்றை வெளியிடுவதினின்றும் உடனடியாக இந்த இணையத் தளங்கள் விலகிக் கொள்ள வேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரை தமிழ்-முஸ்லிம் சமூக ஒற்றுமை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமாக உள்ளது. கடந்த காலங்களின் கசப்பான, துன்பமான, விதிவசத்தால் நடந்துவிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளை இரு சமூகங்களும் பரஸ்பரம் மன்னித்து-மறந்துவிட்டு ஒரே மொழி பேசும் இனங்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்ற வேண்டும். இதற்கான தமது பங்களிப்புகளை தமிழ் இணையத் தளங்கள் உட்பட ஏனைய ஊடகங்கள் இதயசுத்தத்துடன் வழங்க வேண்டுமென்பதே மிக அதிகமான தமிழ்-முஸ்லிம் மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

4 comments:

  1. Tamil literature had a great value,during the past. Tamil novels,stories,songs,even the dramas
    had very good influence over the people. Now in these days the taste of the people have changed accordingly to the writers as well as the directors influence over them.They look for sexy words,sexy appearance and a sexy atmosphere.It has become as a part in our practical life as bread and butter & milk and honey.This is really hard to get rid of this nonsense.The Thrash is having more influence in our lives.Sexy appearance on the stages,cinemas and in written stories/Novels songs are playing a dominant part as result we believe that you cannot have a good atmosphere in future from this rubbish atmosphere.How we would say nonsensical

    ReplyDelete
  2. First dangerous site are Lankasri, Tamilwin, athirvu, athirady.

    ReplyDelete
  3. ஈய ஈழ தேசியம்April 25, 2013 at 10:46 AM

    இலங்கையை பற்றி கற்பனையில் அவதூறுகளை எழுதி தள்ளும் ஆபாச பதிவு எழுதுபவர்களை விடக் கேவலமா எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்நாடுகளிலும் உள்ளனர்.

    ReplyDelete
  4. Lack of spirituality,lack of reading
    habits.lack of self discipline lack of proper guidance are the causes for the younger generation to choose a fantasy entertainment world which consists sexual dreams,
    violence,hatred etc etc.The modern writers and film directors make use of this opportunity

    ReplyDelete