Saturday, April 6, 2013

‘பொதுபல சேனாவை முடிவுக்குக் கொண்டுவர பிரேரணை தயார்’ - ஷிராஸ் மீரா ஸாஹிப்

முடியுமென்றால் செய்துதான் பாருங்களேன்...! - ஞானஸார

கல்முனை மாநகர சபை மூலம் பொதுபல சேனாவை தடைசெய்வதற்கான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு அது, ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் முதல்வர் ஷிராஸ் மீரா ஸாஹிப் குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு சகல உறுப்பினர்களும் விருப்புத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், வெகுவிரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் பிரேரணை பற்றிய அறிக்கையைக் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிடுகையில், பொதுபல சேனா இயக்கம் பற்றிய அக்கறையும், அதன் மூலம் பெற்றுத்தரப்படுகின்ற பிரபலத்திற்காகவும் கல்முனை மாநகர சபையின் அறிவீன உறுப்பினர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள ஞானஸாரர்,

‘நாங்கள் இந்நாட்டிலுள்ள அரசியல் பற்றிக் கவலைப்படுகின்றோம். அரசியலுக்குள் நுழைய வேண்டியவர்கள் கற்றறிவுள்ள - நூல்களை வாசிக்கக்கூடிய மனிதர்களே. என்றாலும் கல்முனை முஸ்லிம்களுக்கு இவ்வாறான, தகவல் ஏதும் அறியாத - விடயங்களைக் காணாத முடிவெடுக்கின்ற அரசியலாளர் - உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அனைவரும் அடிப்படைவாதிகளாக மாறும் நிலையே ஏற்படுகின்றது.

இன்னும் சிறிது நாட்கள் சென்றதும், அவர்களுடைய பிரேரணைகள் பற்றி அவர்கள் அறிந்து கொள்வார்கள். நாங்கள் அவர்களுக்காகப் பாவப்படுகிறோம். அதுவே எங்களால் செய்ய முடியும்.

நாங்கள் அவர்களுக்கு சவால் விடுகின்றோம். நாங்கள் சட்டத்திற்கு எதிரான செயல்கள் ஏதேனும் செய்திருந்தால் வெளிக்காட்டுங்கள்! எங்களைத் தடை செய்வதற்கு முன்னர் சட்டத்திற்கு எதிரான கருமங்களைச் செய்யக்கூடியவர்களை தடை செய்வதற்காக முயற்சி செய்யுங்கள்’ என்று அவர்களிடம் குறிப்பிட விரும்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com