போரில் நாங்கள் யாரும் வெற்றிபெறவில்லை! சமித்த தேரர்
இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், திட்டத்தை அழித்தொழிப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமளிக்க்க் கூடாது என்றும் தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் குறிப்பிட்டார்.
மாத்தறை கூட்டுறவு கேட்போர் கூடத்தில்நடைபெற்ற அனைத்து மத ஒற்றுமை அமைப்பின் இரண்டாவது ஆண்டுப் பூர்த்தி விழாவின் போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘மனிதன் எனும் மிருகத்திற்கு எல்லாமே வெகு விரைவில் மறந்து போகின்றன. அதனால் முதலில் இருந்து தொடங்குகின்றான். மூன்று தசாப்த போர் முடிவடைந்தது மட்டுந்தான். அக்கால கட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் பெரும் பயத்துடன் வாழ்ந்தார்கள். அந்தப் பயத்தை மீண்டும் கொண்டுவர வேண்டாம். அதுதான் எங்களது வேண்டுகோள். இத்தருணத்தில் ஒரு இனம், எங்களுக்கு அடிப்பார்களோ என்று அச்சத்துடன் இருக்கிறார்கள். எந்த நேரம் இரத்த்த்தை ஓட்டவேண்டி வருமோ என்று... இவ்வாறு தீர்மானம் எடுக்கவியலாத மனோபாவத்தை மக்கள் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு பீதியடையும்போது, யாரேனும் சந்தோசிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையில் மனநோயாளிகள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும்,
‘கனடாவில் வானொலி நேர்காணல் ஒன்றின்போது, ‘போரில் யார் வென்றார்கள்? எனக் கேட்கிறார்கள். நான் சொன்னேன். நாங்கள் யாரும் போரில் வெற்றிபெறவில்லை. போரில் எல்லோரும் தோல்வியடைந்தார்கள் என்று. 30 வருடப் போரில் நாங்கள் எல்லோரும் தோல்வியையே சந்தித்தோம். பெறுமதிமிக்க உயிர்கள், உடைமைகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவை எல்லாவற்றையும் இழந்தோம், அவ்வாறு மீண்டும் ஆவதற்கு இடமளிக்கக்கூடாது. நாங்கள் பேச்சுவார்த்தை மூலமும், விட்டுக்கொடுப்புடனும் அவற்றிற்குத் தீர்வுகாண முயல வேண்டும்’ என்றும் சமித்த தேரர் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment