Wednesday, April 24, 2013

எந்த நாட்டிடம் உதவியை பெற்றாலும் எனது அரசை கவிழ்க்க முடியாது என்கிறார் மஹிந்தர்.

உலகிலுள்ள எந்த நாட்டிடம் உதவியை பெற்றாலும் எனது ஆட்சியை கவிழ்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பதட்ட நிலை நிலவுவதாக கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வர வேண்டும். இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.. இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த அரசியல்வாதிகள், இங்குள்ள நிலைமை குறித்து திருப்தி தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்தியாவுடனான உறவு முற்றிலும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு வைத்து இருக்கிறோம். அந்த நல்லுறவை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுகிறோம். வடமாகாண சபை தேர்தலை செப்டம்பரில் நடத்துவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தரைக் கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்து கொண்டிருப்பதுடன், யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் பெரும் பகுதியினரின் மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்து கொண்டிருப்பதனால் அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளது.

இந்த நாட்டில் சிலர் எமது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அரசை கவிழ்த்துவிட முடியும் என்று கனவு காண்கின்றனர். ஒரு அரசை கவிழ்க்கும் சக்தி எங்கள் கையில் மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்கெனவே நாங்கள் நிரூபித்தோம். எங்கள் அரசை கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை. அத்தகைய சாதனைகளை நானும் எனது கட்சியும்தான் செய்ய முடியும்.

அதனால்தான், இன்றும் கூட எனது அரசு வலுவான அடித்தளத்துடன் ஆட்சி செய்து வருகிறது. இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் வன்முறைகளை யார் புரிந்தார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைப்பதில்லை.

இப்போது அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்தால் நிச்சயம் நான் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பேன்.

1 comments :

Anonymous ,  April 24, 2013 at 5:08 PM  

Well said Hon.president Mr.Mahinda Rajapakse.We need people with courage and intelligence.Hope his statements are readily intelligible to the nation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com