Saturday, April 27, 2013

பெண்கள் வதைகளுக்கும், சிறுவர் மீதான முறையற்ற நடவடிக்கைகளுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியது ஊடகங்களே!

பெண்களுக்கு எதிரான வதைகளை எதிர்ப்பதோடு, பெண்களுக்குச் சரியான முறையில் பாதுகாப்பு வழங்குவதை வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிடுகிறார்.

தனது தாய்க்கு, சகோதரிக்கு சரியானமுறையில் அன்பும், கௌரவமும் செலுத்துகின்ற குடும்பத்திலிருக்கின்ற ஆண்மகனால் சமூகத்திலிருக்கின்ற எந்தவொரு பெண்ணுக்கும் தீங்கிழைக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட கூட்டமொன்றின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘பெண்கள் தொடர்பான வதைகளை ஆராயும்போது, பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளிலேயே பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுப்பது தெரியவந்துள்ளது.பெரும்பாலும் சின்னஞ் சிறு பிரச்சினைகள் காரணமாக குடும்பத்திலுள்ள கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிளவானது அவர்களை மட்டுமன்றி பிள்ளைகளின் மனோநிலையையும் பெரிதும் பாதிக்கின்றது. அது மிகவும் பயங்கரமானது. அந்தப் பிள்ளைகளுக்குத் தங்கள் பிரச்சினைகளை, துன்பங்களை எடுத்துச் சொல்ல யாரும் கிடையாது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாக வேண்டியேற்படும்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சில் பணிபுரியக்கூடிய சகலரினதும் கட்டாயத் தேவையாக இருக்க வேண்டியது என்னவென்றால், அமைச்சின் குறிக்கோளை சரிவரப்புரிந்து அதற்கேற்றாற் போல பணிபுரிவதாகும். நானும் அந்த அமைச்சரவையில்தான் பணிபுரிகிறேன் என்று பெருமைப்படக்கூடிய வண்ணம் அமைச்சை மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் வதைகள், சிறுவர் துன்புறுத்தல்கள் நடைபெறுவது அமைச்சின் அசமந்த போக்கினால் அல்ல. அதற்குப் பல்வேறு விடயங்கள் ஊன்றுகோலாய் உள்ளன. அவற்றை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து தீர்வைக் காண வேண்டும். ஆயிரக் கணக்கான வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க எமது கலாச்சாரம் இன்று சீரழிந்துள்ளது. விசேடமாக இதற்கு சில ஊடகங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com