Wednesday, April 10, 2013

திரியைக் கொழுத்திப் போட்டது யார்? குழப்பத்தில் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் லங்காதீப பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. லங்கா தீப விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ்-இன் சகோதரப் பத்திரிகையாகும்.

நம்பகமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்தே தகவல் கிடைத்ததாக லங்கா தீப குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் இந்த முடிவை இன்னும் சில வாரங்களின் பின்னரே கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகையும் மாவையின் படத்துடன் நேற்று கட்டம் கட்டிப் பிரசுரித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பெரும் புகைச்சலையும் பிளவையும் உருவாக்கக் கூடிய இந்தச் செய்தியை கொழும்புப் பத்திரிகைக்குக்கசியவிட்டது யார் என்பது ஒருபுறமிருக்க, தமிழரசுக் கட்சிப் பத்திரிகை கூட்டமைப்பின் இந்த முடிவை கொழும்புப் பத்திரிகையை மேற்கோள்காட்டி ஏன் பிரசுரித்தது என்பது மற்றொரு வினாவாகும்.

அதைவிட முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால், இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட, இந்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் அந்த பெருமளவிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் யார் யார்? என்பது தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாணத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பவர்களாக இதுகாலவரை செய்திகளில் அடிபட்டுவரும் - முன்னாள் உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட இணைச்செயலாளர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சரவணபவன் ஆகியோரும் இந்த முடிவை எடுத்த கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுள் அடங்குகிறார்களா என்பது தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இவர்களில் ஒருவர், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்காகவே தனது பத்திரிகைப்பணியை கைவிட்டிருந்தார். வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக குதிப்பதற்கான தனது விருப்பத்தை கட்சிக்குள் தெரியப்படுத்தியுமிருந்தார். இன்னொருவருக்கு தமிழரசுக் கட்சி நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்களித்திருக்கிறது. அதைச் சொல்லி வரும் அவர், தன்னை வேட்பாளராக நிறுத்தாவிட்டால், தனியே போட்டியிடுவதற்கான லிஸ்ட் தயாரிப்பில் இறங்குவேன் என்று மிரட்டியிருப்பதாகவும் தகவல்.

மற்றொருவர், மாவை முதலமைச்சராகி விடாமல் தடுப்பதற்கென்றே கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவுசெய்யும் கோரிக்கையை வைத்து வந்தவர். இப்போது, மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கசியவிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தித் தந்திரத்திற்குப் பதிலடியாக, முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ் வரன்தான் கூட்ட மைப்பின் வேட்பாளர் என்ற நம்பத்தகுந்த வட்டாரத் தகவலை கொழும்பு ஊடகங்களுக்கு போன் போட்டுச் சொல்லிவருகிறாராம்.

இன்னொருவர் தலைவர் சம்பந்தனை நம்பி முதலமைச்சர் கனவிலிருப்பவர். மற்றொருவர், முதலமைச்சர் யார் என்பதை எனது பத்திரிகையே தீர்மானிக்கும் வேறு யாருமல்ல என்ற வீறாப் பிலிருப்பவர். இவர்களெல்லாம் மாவையை முதலமைச்சர் வேட்பாளராகத் தீர்மானித்த அந்த கூட்டமைப்பின் பெருமளவிலான முக்கியஸ்தர்கள் என்ற குழுவுக்குள் வருவார்களா என்பதே கேள்வி. இல்லாவிட்டால், இந்தத் திரியைக் கொளுத்திப் போட்டிருப்பது யார்? எதை எதிர்பார்த்து? ஒன்றுமட்டும் தெரிகிறது. விரைவில் வெடிக்கப்போகிறது கூட்டமைப்புக்குள்ளேயே அறிக்கைப் போர்.

2 comments:

  1. உண்மையில், படித்த, தமிழ் மக்களால் மதிக்கப்பட்ட, நேர்மையான, யதார்த்தவாதியான ஒருவரே வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
    திருப்பத் திரும்ப புளித்துப்போன அரசியல் நடத்தும் தமிழீழ கோமாளிககளை தமிழ் மக்கள் இனியும் நம்பி மேலும் பாதாளம் நோக்கி விழ விரும்பவில்லை.

    மக்களின் எதிர்பார்ப்புக்கள், விருப்பங்களுக்கு மாறாக தமிழ் கூட்டமைப்போ அல்லது மற்றய தமிழ் அமைப்புக்களோ செயல் பட யோசித்தால் அது எல்லோருக்குமே பாதகமாக போய் முடியும். கிழக்கு மாகாணம் ஒரு நல்ல படிப்பிணையை தந்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம். வடக்கிலும் நிலைமை மாறினால்,
    தமிழனுக்கு கடல் தான் மிஞ்சும். நாமே எமது தலையில் மண் கொட்டியதாக முடியும்.
    அதன் பின்னர் எவரையும் குறை கூறி பிரயோசனம் இல்லை

    ReplyDelete
  2. தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலங்களை விட்டு, மக்களின் நலன்களுக்காக ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டிய காலம் வந்து விட்டது.

    மக்களால் மதிக்கப்பட்ட, படித்த, நேர்மையான, யதார்த்தவாதியான ஒருவரே வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

    ReplyDelete