Wednesday, April 3, 2013

காணிச்சட்டத்தினை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றுவீர். மஹிந்தர் உத்தரவு!

இன்று நாட்டில் காணி தொடர்பான சட்ட திட்டங்கள் அதனை பங்களிக்கின்றபோது ஏற்படுகின்ற பிணக்குகள் தொடர்பில் தனது கவனத்தினை திருப்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற அமைச்சின் மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி காணி தொடர்பான சட்டங்களை தற்காலத்திற்கு பொருந்தக்சூடிய வகையில் சீர்த்திருத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் அதன் அதிகாரிகளுக்கு, இப்பணிப்புரை விடுத்துள்ளார்.

நில அளவை திணைக்களத்திற்கு சொந்தமான காணி அளவீட்டு சட்டம், மறுசீரமைக்கப்பட வேண்டும். அபிவிருத்தி திட்டங்களுக்காக, காணிகளை சுவீகரிக்கும்போது, உடனடியாக பாதிக்கப்படுவோருக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும், அவரின் பணிப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரச காணிகளை, பல்வேறு தரப்பினர், அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பாகவும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச காணிகளை பாதுகாக்கும் பொறுப்பு, காணி அமைச்சிற்கு உரியதாகும். அனுமதியின்றி, அவற்றை பயன்படுத்துவோருக்கு எதிராக பட்டம் பதவிகளை கருத்திற்கொள்ளாமல், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடும் தொனியில் எச்சரித்துள்ளார் ஜனாதிபதி.

காணி மோசடிகள் தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களினால் சுவீகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள காணிகள் தொடர்பாகவும், உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அவை, அரசாங்க அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நியாயமற்ற முறையில் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு, அரச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை, அதன் உரிமையாளர்களுக்கு, திருப்பி ஒப்படைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாகவும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படும் காணிகளை, அவர்கள் பயன்படுத்தாவிடின், அவற்றை அரசாங்கத்திற்கு மீள பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமும், அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென, அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணிகள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து, ஜனாதிபதி, அதிகாரிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

காணி பிரச்சினைகள தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பிலும், அவர் வினவியுள்ளார். மக்கள், பிரதேச சபை, மாகாண சபைகளுக்கு வழங்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு, தீர்வு பெற்றுக்கொடுப்பது தாமதமடைவது, குளங்கள் மற்றும் காடுகள் உள்ள காணிகளில், கட்டிடங்களை நிர்மாணிப்பது போன்ற விடயங்கள் குறித்தும், ஆராயப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் காணி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு, காணி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இது உரிய பங்களிப்பை செலுத்தும். மஹிந்த சிந்தனைக்கேற்ப, மக்களுக்கு ஒரு லட்சம் காணி துண்டுகளை வழங்கும் வேலைத்திட்டத்தையும் மீறி, கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் காணி துண்டுகளின் சட்டரீதியான உரிமையை மக்களுக்கு வழங்க, அரசாங்கத்தினால் முடிந்தது என்றும், இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment