யாரை வாட்ட வருகிறது இந்த கோடை
இன்றிலிருந்து வரும் 15ஆம் திகதிவரை காண்டாவனம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது கடந்த சில நாட்களில் இருந்த வெக்கையை விட அதிகமாய் நம்மை வாட்டப் போகிறது. வறுத்தெடுக்கும் வெயிலில் உடல் வெப்பமடைவது, சரியான நித்திரையின்றிப் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், தொண்டை நோ, எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பாதிப்புகளின் பட்டியலும் நீளும்.
நமது கோடைகள் முன்பைவிட அதிகம் சூடாகி வருகின்றன என்றுதான் கடந்த சில வருடங்களாகத் தோன்றுகிறது. இதுபோல் வெக்கை இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருக்கவில்லை என்றே பலரும் அலுத்துக் கொள்கிறோம்.
கோடைகாலத்தில் இரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடுவதால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டி இருக்கும். அதேபோல பச்சைக் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டும் உடலில் நீர்த்தன்மையைப் பேணிக்கொள்ள வேண்டும்.
மாறாக, வெக்கைக்கு ஐஸ்கிரீம், குளிர்பதனப்பெட்டியில் வைத்த நீர் நன்றாக இருக்கும் என்று அருந்தினால் தொண்டை பாதிப்பும் தொற்றுகளும்தான் ஏற்படும். கோடையின் அருமருந்து இளநீர் என்பதை மறந்துவிட வேண்டாம். இளநீர் சூட்டைக் குறைக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், உடலில் ஏற்படும் நீர்-உப்பு பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யும்.
வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலையும் மாலையும் குளிப்பது நல்லது. மெல்லிய பருத்தி ஆடைகளையே தேர்ந்து அணிந்துகொள்வது சிறந்தது. வெப்பத் தாக்கு ஏற்பட்டுவிடாமலிருக்க வெயிலில் கண்டபடி அலையாமல் இருப்பதும் நல்லது. பெரிய நகரங்களில் அலுவலகங்கள் மற்றும் தனியாரும் குளிர்சாதனங்களைப் பெருமளவில் உபயோகிப்பதால், மின்சாரம் அதிகளவு செலவாகிறது. கணனி போன்ற புதிய இலத்திரனியல் உபகரணங்களும் விரைவில் சூடாகிப் பழுதடைந்து விடுவன என்பதால் குளிரூட்டிகள் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளன. இதனால் மின்சாரப் பற்றாக்குறை உண்டாகிறது.
ஏன் குளிர்சாதனப் பெட்டிகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சுகின்றன? குளிர்ச்சிக்கு பிரதானமான காற்றழுத்தி செயற்திறன் குறைந்த ஒரு அமைப்பு. காற்றழுத்திக்குப் பதிலாக வேறு ஒரு வழியை ஆராய்ந்து வந்தார்கள். இப்போது அந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். காந்த சக்தியுடைய சில விசேஷ உலோகங்களை ஆராய்ந்து புதிய வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
1997 ல் விஞ்ஞானிகள் கடோலினியம், சிலிக்கன், மற்றும் ஜெர்மானியம் கொண்ட உலோகக் கலவை, வெப்பத்தை சாதாரண வெப்ப அளவில் காந்த சக்தியால் கட்டுப்படுத்த முடியுமெனக் காட்டினார்கள். இதன் பின், பல புதிய உலோகக் கலவைகளில் இவ்வகை நடத்தை இருப்பதை ஆராய்ந்து வெளியிட்டார்கள்.
இந்த வருடத்திற்குள்ளேயே சந்தைக்கு 1,000 சதுர அடி வீட்டை குளிர் செய்ய காற்றழுத்தி இல்லாத குளிர்சாதனப் பெட்டியைக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்கள். வழக்கமான குளிரூட்டியை விட, மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் போதுமாம். அத்துடன், இன்று காற்றழுத்திகள் உபயோகிக்கும் இரசாயனங்களைத் தவிர்த்து வெறும் தண்ணீரை உபயோகப் படுத்துமாம். இந்த இரசாயனங்கள் மோசமானவை என்றபோதும் வேறு வழியில்லாமல் உபயோகித்து வருகிறோம்.
வருங்காலத்தில் குளிரூட்டிகள் இன்றி யாருமே இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போலவே தோன்றுகிறது. இத்தகைய புதிய கண்டுபிடிப்புச் செய்திகள்தான் முதலில் நம் மனங்களைக் குளிர்விக்க வேண்டும்.
0 comments :
Post a Comment