குருணாகலை புனித பூமி அகழ்வு நடவடிக்கைகளுக்காக, சட்ட ரீதியற்ற கட்டடங்கள் அகற்றப்படுகின்ற போதும், எக்காரணம் கொண்டும் அங்கு இருக்கின்ற முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என தேசிய உரிமைகள் தொடர்பான அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
மதம் சார்ந்த விடயங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக தேவை இருப்பதனால் முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது எனவும், அங்கு மத வழிபாடுகளைச் செய்யும் அன்பர்களின் தேவைகருதி அந்தப் பகுதியை அண்மித்த ஓர் இடத்தில் ஒருபகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
'இதற்கு முன்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த புனித பூமியை அண்மித்திருந்த நான்கு கடைகளையும் அகற்றினோம். பாதுகாப்புச் செயலாளர், தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அங்கு சென்று முஸ்லிம் சகோதரர்களுடன் கலந்துறவாடி தீர்வொன்றுக்கு வந்துள்ளனர்.
அதற்கேற்ப, அங்கிருந்த மலசல கூடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீக நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இங்கு நீண்டகாலமாக முஸ்லிம்கள் வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதனால், அதற்கு நாசம் விளைவிக்க மாட்டோம்' என்றும் அமைச்சர் ஜகத் பாலசூரிய குறிப்பிட்டார்.
( கேஎப்)
No comments:
Post a Comment