Wednesday, April 10, 2013

புலிகளின் விமானங்களை கண்காணிக்க அமெரிக்க உதவியை நாடிய இலங்கை- விக்கிலீக்ஸ்

2007ஆம் ஆண்டு கொழும்பு கட்டுநாயக்க விமானப்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ரேடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்தவர் ரோபேர்ட் ஓ பிளேக். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச அவருடன் நடத்திய உரையாடல் பற்றி வோஷிங்டனுக்கும் இதர அமெரிக்க தூதரகங்களுக்கும் பிளேக் அனுப்பிய அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மார்ச் 30ம் திகதியன்று தூதரை சந்தித்து ஒரு வேண்டுகோளை வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க இலங்கையின் வான்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவ குழு ஆராய வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கையிடம் தற்போது இருப்பது இந்தியா அளித்த 2 இரு பரிமாண ரேடார்கள்தான். விரைவில் சீனாவிடம் இருந்து முப்பரிமாண ரேடார்களை வாங்க இருக்கிறோம் என்றும் கோத்தபாய கூறியதற்கு பதிலளிக்க அமெரிக்க தூதர், இந்த வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் இந்தியாவுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட வேண்டியது இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் 8 ஆண்டுகாலமாக விமானப் படையை வைத்திருக்கின்றனர். அவர்களிடம் குறைந்தபட்சம் 2 விமானங்கள் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளதடன் வவுனியாவில் நிறுவப்பட்டிருக்கும் இந்திய ரேடாரில் அவை தெரியாமல் வடக்கிலிருந்து இலங்கையின் மேற்குப் பகுதியில் வில்பத்து தேசிய பூங்கா பகுதிக்கு மேலாக சென்று புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இதனால் இலங்கையின் முழு வான்பாதுகாப்பு கட்டமைப்பையும் அமெரிக்க இராணுவக் குழு ஆராய்ந்து அதனை மேம்படுத்த உதவ வேண்டும். குறிப்பாக அமெரிக்காவின் ரேடார் தேவை. அதற்கு முன்னதாக முழுமையாக வான்பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் கோத்தபாய கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்க கொழும்பு தூதரகம் பரிந்துரை செய்தது. இலங்கைக்கு கடற்பரப்பு கண்காணிப்புக்காக அமெரிக்கா ஏற்கெனவே கொடுத்த ரேடார்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் கோத்தபாய கூறியதாக விக்கிலீக்ஸ் ஆவனங்கள் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com