உங்கள் பங்களிப்பு மகத்தானது. அமெரிக்கா வாழ் இலங்கையர்களை சந்தித்தபோது மஹிந்தர்.
அமெரிக்க வாழ் இலங்கை பிரஜைகளுடனான சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்றினை அலரி மாளிகையில் நடாத்திய ஜனாதிபதி நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளும்போது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவு மகத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
30 வருட கொடூர யுத்தத்தை முடித்து வைத்து துரித அபிவிருத்தியை ஏற்படுத்தியதற்காக வெளிநாட்டு வாழ் இலங்கை பிரதிநிதிகள் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியை பாராட்டினர்.
இலங்கை கலாசார விழுமியங்களை பாதுகாத்து, துரித அபிவிருத்திகளை நாட்டில் ஏற்படுத்தியமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் தெரிவித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளை எதிர்கொள்ளும் போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தொழிலாளர் சமூகம் மற்றும் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ற இலங்கையர்களின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அலகப்பெரும, சுசில் பிரேம் ஜயந்த், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment