யாழ். வலிகாமம் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் 38 ஆயிரத்து 97 பேச் அளவு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதியுடைய அறிவித்தலை யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ஏ.சிவசுவாமியின் கையெழுத்துடன் நேற்றைய தினம் வலிகாமம் பகுதியில் படையினர் மற்றும் கிராமஅலுவலர், பட்டதாரிப் பயிலுநர்கள் ஒட்டியுள்ளனர்.
வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த காணிக்கு உரிமை கோருபவர் என கூறப்படுபவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் யாழ். காணி சுவீகரிப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின் படி திருத்தப்பட்டவாறான காணிகொள்ளும் சட்டத்தின் 2ஆம் பிரிவின் முதலாம் உட்பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஆணையிட்டதன் பிரகாரம் குறித்த காணி பொதுத் தேவைக்கு அவசியம் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைத்தல் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இராணுவத் தளங்களின் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகவும், குறித்த இடம் தேவைப்படுவதாக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் ஊடகச் செயலாளர் துமிந்த அமரசேகர தெரிவிக்கையில், இந்த காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதனை உறுதிப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான இழப்பீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மிகவும் அத்தியாவசியமான காணிகள் மாத்திரமே சுவீகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment