Sunday, April 28, 2013

உதயன் பத்திரிகை என்னை அவமானப்படுத்துகின்றது. போட்டார் டக்ளஸ் நான்காம் வழக்கு!

தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும் நியு உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிடட் கம்பனி தான் வெளியிடும் “உதயன்” பத்திரிகையின் மூலமாக பல தவறான செய்தி அறிக்கைகளை பிரசுரம் செய்துள்ளதென்றும், அத்தகைய மூன்று செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக மேற்படி கம்பனிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று மானநட்டஈடு கோரும் வழக்குகளை ஏற்கனவே தாக்கல் செய்து, இவ்வழக்குகள் மூன்றும் தற்போது இந்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்ற நிலையில், மேற்படி கம்பனிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் ஒரு வழக்கினை தனது சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லொஸ் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

நியு உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிடட் கம்பனியால் 2012 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி பிரசுரம் செய்து வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் பிரதான செய்தியாக அதன் முன்பக்கத்தில் “தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்” ” நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. கேள்வி” எனும் தலைப்பின் கீழ் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தின் உள்ளடக்கமானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதுடன் பொய்யான விடயமெனவும், உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும், உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் செயற்பட்டு, மேற்படி கம்பனியானது இப்பிரசுரத்தைப் பிரசுரித்து விநியோகித்துள்ளது என்பதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியதாக தன்னை அவதூறுக்கு உள்ளாக்கும் பொய்யாகப் புனையப்பட்ட மேற்கூறப்பட்ட செய்திப் பிரசுரத்தை மேற்படி கம்பனியானது தனது உதயன் பத்திரிகையில் பிரசுரித்து அதனை பொதுமக்களுக்கு விநியோகித்து விற்பனை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ் வழக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி கம்பனியால் செய்யப்பட்டுள்ள மேற்படி செய்திப் பிரசுரமானது அதனளவில் தன்னை அவதூறுக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கும் பிரசுரமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐநூறு (500) மில்லியன் ரூபா பணத்தை இவ்வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பளிக்கும் தினம் வரையிலான சட்டரீதியான வட்டியுடனும், அதன் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்ட தினத்திலிருந்து அத்தீர்ப்பில் குறிப்பிடப்படும் முழுத்தொகைக்கும் உரிய முழுப்பணமும் செலுத்தி முடியும் தினம் வரைக்கும் உரித்தான சட்டரீதியான வட்டியையும் எதிராளியிடமிருந்து அறவிட்டுத் தருமாறு கோரி அமைச்சர் இவ் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இவ் வழக்கினை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் மே மாதம் 17 ஆம் திகதிக்கு எதிராளி கம்பனியை நீதிமன்றத்திற்கு ஆஜராகி இவ்வழக்கிற்கு பதிலிடுமாறு அழைப்பானை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com