2012 இலங்கையில் 6.4% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது மத்திய வங்கி ஆளுனர்
உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் 2012 ஆம் ஆண்டில் இலங்கை 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் நேற்று தெரிவித்தார்.இலங்கை மத்திய வங்கியின் 63 வது வருடாந்த அறிக்கை ஜனாதிபதியும், நிதி திட்டமிடல் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்து வங்கியின் தலைமையகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: 2012 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து இருக்கின்றது. என்றாலும் 2006 ஆம் ஆண்டு முதல் தொடராக ஏழு வருடங்கள் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் சாதாரணமாக 6.7 வீதத்தை அடைந்து வந்திருக்கின்றது. அதேநேரம் 2010 – 2012 வரையான காலப்பகுதியில் 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கின்றது.
இது யுத்தம் முடிவுற்ற பின்னர் எமது பொருளாதாரம் துரித வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதையே காட்டுகின்றது. இந்த நாட்டின் பண வீக்கத்தைக் கடந்த 50 மாதங்களாகத் தனி இலக்கத்தில் எம்மால் பேண முடிந்துள்ளது. அதனை மேலுமொரு வருடத்திற்குப் பேணிக் கொள்ள முடியுமென்றால் அது நாட்டில் பாரிய மேம்பாட்டை ஏற்படுத்தும்.நாட்டில் முப்பது வருடங்களின் பின்னர் முதற் தடவையாக வெளிநாட்டுக் கடன் வீதம் குறைவடைந்துள்ளது. அது உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 80 வீத மட்டத்திற்கு உள்ளது. அதனை 65 சதவீதத்திற்கு குறைப்பது அவசியம்.வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.
இவ்வளவு தொகையான வெளிநாட்டுக் கையிருப்பைப் பேணிக் கொண்டு கடந்த 7 வருடங்களில் 113.00 பில்லியன் ரூபாவை வருமானமாக அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் இதற்கு முற்பட்ட 56 வருடங்களில் 60 பில்லியன் ரூபாவையே இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு வருமானமாகப் பெற்றுக் கொடுத்தது. இலங்கையரின் தனிநபர் வருமானம் 2012 ஆம் ஆண்டில் 2.923 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
எமது உற்பத்தித் திறனும், செயற்றிறனும் அதிகரிக்க வேண்டும். அதனூடாக 2016 ஆம் ஆண்டாகும் போது 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.
0 comments :
Post a Comment