Friday, April 12, 2013

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . (பாகம் 2)

1984ம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைத் தவிர்த்து ஏனைய மூன்று விடுதலை அமைப்புக்களுடன் கைகோர்த்தார் தானைத் தலைவர் , தமிழினத்தின் ஒட்டு மொத்தமான பிரதிநிதி வே.பிரபாகரன் . கைகோர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் மற்றைய அமைப்புக்களின் தலைவர்களுடன் கரங்களை இணைத்து புகைப்படம் எடுத்து அவ்விணைவை பிரபலப்படுத்தினார்.

நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,

பின்பு நடந்ததென்ன "ஈரோஸ்" எனும் அமைப்பின் தலைவர் வே. பாலகுமாரன் அவர்களைத் முழுத் தலையாட்டியாக்கி தம்முள் விழுங்கிக் கொண்டதோடு தளத்தில் நின்று போராடிய மற்றைய தலைவர்களைத் தான் கைகோர்த்து உறவாடியவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டார் அவ்வுன்னதத் தலைவர்.

சரி அவர்கள் தான் தலைவர்கள் , ஆனால் இவரது இயக்கத்தில் இவரது கொள்கைகளை நம்பி வந்த இளம் தமிழ்த்தளிர்ளைப்போல மற்றைய இயக்கங்களில் இணைந்திருந்த மறவர்களை உயிரோடு கொளுத்தியும், துப்பாக்கிக்கு இலக்காக்கியும், சித்திரவதை செய்தும் அழித்தொழித்தார் இம்மேதகுத் தலைவர்.

இன்று பதாகைகளைத் தூக்கிக் கோஷமிடும் என் இனிய உறவுகளே ! அன்று நீங்களும் நானும் என்ன செய்து கொண்டிருந்தோம் ? ஞாபகமிருக்கிறதா ?

பிரபாகரன் அவர்களின் அரசியல் குரு "தேசத்தின் குரல்" அண்டன் பாலசிங்கம் அவர்களின் அழகிய அரசியல் விளக்கங்களினால் இம்மரணங்களை நியாயப் படுத்திக் கொண்டிருந்தோம். அன்று ராஜபக்சாவும், சிங்களர்களும் எங்கள் கண்ணுக்கு எதீரிகளாகப் படவில்லை இந்த அப்பாவி தமிழுணர்வு மிக்க இளைஞர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

எத்தனை புத்திஜீவிகள் மெளனமாய் அன்று கண்ணீர் சிந்தித் தம் உணர்வுகளை உள்ளத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள் தெரியுமா ?

நடந்து போன பழைய சரித்திரத்தைக் கிளறுவதால் என்ன பயன் ? இன்றைய ஈழத் தமிழரின் இன்னல்களைப் போக்கும் செயல்களை ஆதரிப்பதை விடுத்து அலட்டுகிறாயே என்று என்னைத் திட்டாதீர்கள். எனது நோக்கம் அதுவல்ல.

சிந்திக்காமல் செயல்பட்டதன் விளைவைச் சித்திரிக்கவே நடந்தவைகளைக் குறிப்பிடுகிறேன்..

தமக்கு ஆதரவளிக்காமல் தம்மை விமர்சித்ததினால் "கூத்தாடிகள்" என தென்னிந்தியத் திரைக்கலைஞர்களை விமர்ச்சித்தவர்கள் தான் இவர்கள். அவர்களால் கூத்தாடிகள் என அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான மாண்புமிகு மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நிதி உதவி இல்லாதிருந்திருந்தால் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு பின்பு கோலோச்சிய அளவிற்கு என்றுமே வளர்ந்திருக்க முடியாது.

இன்று இவர்களின் எச்சங்களாகிய புலம்பெயர் புலிப்பினாமிகள் தாம் வாழும் நாடுகளில் தென்னிந்திய திரைப்படங்களை ஓடாமல் பகிஷ்கரிக்கப்பண்ணுவதன் மூலம் தென்னிந்திய திரைக்கலைஞர்களை பயமுறுத்தி அவர்களது மனசாட்சியை அடகு வைத்து விட்டு இவர்களின் அரசியல் வியாபாரத்தில் விற்பனைப்பொருட்களாக அவர்கள் பயன் படுகிறார்கள். (நடிகர் அஜித்திற்கு நடந்ததை அறிந்திருப்பீர்கள் )

அன்று செய்ததைப் போலவே இன்றும் ஈழமக்களின் உண்மைத் தேவைகள் என்ன என்பதை உணரத் தலைப்படாமல் அரசியல் அறிவிலிகள் போல என் இனிய தமிழ்நாட்டுச் சொந்தங்கள் நடத்தப்படுவதைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

இன்று மஹிந்த ராஜபக்ச போய் நாளை ஒரு ரணில் பதவிக்கு வந்ததும் தமிழ் ஈழம் பிரித்துக் கொடுக்கப்பட்டு விடும் என்று உண்மையாக நம்புகிறீர்களா ? நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்கள்.

ஈழத்தமிழரின் வாழ்க்கை இனி ஒன்று பட்ட ஈழத்தினுள்ளே அவர்களின் சகோதரகளாகிய சிங்கள மக்களுடன் ஜக்கியப்பட்ட ஒன்றாகவே இருக்கப் போகிறது. அத்தகைய கட்டமைப்புக்குள் ஈழத்தமிழருக்கு எத்தகைய சுயாதீன உரிமைகள் வரையறுக்கப்பட முடியும் என்பதைத் தீர்மனிப்பதே இன்று நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய உதவியாகும்.

இதைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து மகிந்த ராஜபக்ச்வைக் கூண்டிலேற்றுவது எவ்வகையில் உதவும் எண்ணிப்பார்த்தீர்களா ?

சதாமில்லாத ஈராக்கும் , கடாபி இல்லாத லெபனானும் இப்போது என்ன சந்தனத்திலா குளித்துக் கொண்டிருக்கிறது ?

இந்தியா எனும் மாபெரும் தேசம் தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகும். இன்றைய மேற்குலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியத் தீர்க்கும் தேவைக்கு இந்தியாவைப் பெருமளவில் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

ஈழத்தமிழரின் நியாயமான தீர்விற்கு இந்தியா எடுக்கப்போகும் முக்கியமான பாத்திரத்திற்கு வலுச் சேர்க்கப்போகிறீர்களா ? அன்றி அதை வலுவிழக்கச் செய்யப் போகிறீர்களா ?

உங்களது போராட்டங்கள் இந்தியாவின் பலத்தைக் குன்றச் செய்யுமேயல்லாது அதற்கு உதவாது. ஈழத்தமிழர் அனைவரும் இந்தியாவைத் தமது பெரிய அண்ணன் போலவே நோக்குகிறார்கள். ஆனால் அவ்வண்ணனின் கைகளைக் கட்டும் கயிறை நீங்கள் உங்கள் போராட்டங்களால் திரித்துக் கொண்டிருப்பதை உணர்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அதன் வலியை உங்கள் தொப்புள்கொடி உறவுகள் நிச்சயம் உணரத்தான் செய்வார்கள்.

அரசியல் உரிமை மறுக்கப்பட்டது , பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, மனித உரிமைகள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனும் கோஷங்களை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டதே ஈழத்தமிழரின் போராட்டம்.

ஆனால் அதே பேச்சுச் சுதந்திரம் , கருத்துச் சுதந்திரம் , மனிதச் சுதந்திரம் எமது தேசியத் தலைவர் "மேதகு வே.பிரபாகரனால் " ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டதா? எந்த உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று விடுதலைப் புலிகள் கோஷித்தார்களோ அதே உரிமை மாற்று இயக்கத் ஈழத்தமிழ் போராளிகளுக்கும், மாற்றுக் கருத்துக் கொ\ண்ட ஈழத் தமிழர்களுக்கும் அவரால் வழங்கப்பட்டதா ?

சிறீலங்காச் சிறைகளில் தமிழ்க்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளிலும், கொடுமைகளிலும் பார்க்க அதிக அளவிலான கொடுமைகள் புலிகளின் சித்திரவதை முகாம்களில் ஈழத் தமிழ் போராட்டக் வீரர்களும், மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? இல்லையெனில் அவைகள் மேதகு எனப்படும் மேதாவியினால் நடத்தப்பட்டன என்பதால் அதைச் சரியென ஏற்றுக் கொள்கிறீர்களா ?

எனதருமை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே !

உங்கள் உணர்வுப்பானைகள் மூன்று வருடங்கள் கழித்து கொதிக்கின்றன . இதன் கொதிப்புக்குப் பின்னனி உங்கள் கட்சிகளின் அரசியல் லாபங்கள் என்பதை அறியாதவர்கள் மிகச் சிலரே ! உங்கள் மத்திய அரசைச் சங்கடங்களில் மாட்டி உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக நிறைவேற முடியாத கோரிக்கைகள் எனும் பந்தங்களுக்கு தமிழ் மீதுள்ள உணர்வு எனும் எண்ணெய் வார்த்து தீ மூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் மொழி மீது உள்ள மோகம் வெறியாக மாறி விட்டால் அது உங்களையே பிடித்துத் தின்னும் பூதமாக மாறிவிடும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்பதை நான் நம்பத் தாயாரில்லை.

சீமான், திருமாவளவன் போன்றோர்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையில் நடப்பதை எதிர்பார்க்கலாம் ஆனால் பழகாலம் அரசியலில் அனுபவம் பெற்ற கலைஞர், முதல்வர் செல்வி ஜெயலலிதா, வை.கோ , ஜயா நெடுமாறன் போன்றோரும் இதே குட்டையில் ஊற முற்பட்டதுதான் மனதை வருத்துகிறது.

வலிமையான இந்தியா தான் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம். தயவு செய்து உங்கள் சுயநலத்திற்காக இந்தியாவின் வலிமையைச் சிதைத்து விடாதீர்கள். அது ஈழத்தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவக்கூடிய செய்கையல்ல

(தொடரும்)

நல்லையா குலோத்துங்கன்
(ஈழத்திலிருந்து)

இவ்வாக்கம் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment