நெஞ்சம் நிறைந்த தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு,
கண்ணீரோடு இவ்வீழத்தமிழன் எழுதும் கடிதம் . தொப்புள் கொடி உறவுகளாய் , உள்ளம் நிறைந்த உறவுகளாய் ஈழத்தமிழர்களாகிய எங்களின் நன்மையே கருத்திற் கொண்டு அல்லும் பகலும் போராட்டம் நடத்தும் இனிய உறவுகளுக்கு இதயம் கனிந்த நன்றியோடு கூடிய நெகிழ்வான வணக்கங்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய மாணவர் சமுதாயம் அகிலத்தின் பரப்பினிலே தம் தேசத்தின் வரைபடத்தை நிலைக்கச் செய்ய உதவும் உன்னதமான கல்வியைப் புறக்கணித்து தமது தொப்புள் கொடி உறவுகளுக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் அனைவருக்கும் இவ்விழத்தமிழனின் முதற்கண் நன்றியறிதலோடு கூடிய பணிவான வணக்கங்கள்.
என் தமிழ்நாட்டுச் சொந்தங்களே ! நீங்கள் இருவகைகளில் திசைமாற்றிப் பயன்படுத்தப்படுகிறீர்கள்.
ஒருபுறம்,
.உங்கள் மண்ணில் உங்கள் எதிர்காலச் சுபீட்சத்திற்காக உழைக்க வேண்டிய பல அரசியல் தலைவர்கள் உங்களின் உண்மையான தமிழ் மீதும் தொப்புள்கொடி உறவுகளின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறையைப் பயன்படுத்தி தமது அரசியல் தேர்தல் வெற்றி எனும் தேரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் ,
ஏதும் அறியாத வாழ்வின் அடுத்தவேளை உணவுக்கு வழியறியாமல் தவித்துக் கொண்டிருந்த பச்சிளம் பாலகர்கள் தமிழீழம் எனும் அடையமுடியா இலக்கை அடையமுடியும் எனும் தவறான வழிகாட்டுதலில் ஈழத்து மண்ணில் உயிரிழந்து கொண்டிருக்கையில் தாம் ஓடித்தப்பி புலம்பெயர்ந்த தமிழர் எனும் பெயரில் புலனை விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் தமது புலம்பெயர் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உங்களின் உணர்வுகளின் மீது தமிழீழம் எனும் பகற்கனவுத் தேரை ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர்ந்த மற்றொரு வகையான மேற்குலக பேரினவாத நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு உண்மையான உதவி தேவைப்படும் காலத்தில் வாளாவிருந்து விட்டு இப்போது தமது அதிகாரத் தேரை ஈழத்தில் ஓட்டுவதற்காக அங்கு அரசியல் தலைமை மாற்றத்தை வேண்டி புலித் தலைமை அழிக்கப்பட்டு மூன்று வருடங்களின் பின்னால் போர் விசாரணை வேண்டிக் கொண்டு எமது இனிய தமிழீழ உறவுகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உறவுகளே !
நிறைவேற முடியாத கோரிக்கைகளைப் பதாகைகளாகத் தாங்கிக் கொண்டு உங்கள் கல்வியைச் சீரழித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கத் தவறினால் சிந்திக்க தவறியதால் சந்திக்கு இழுக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகி விடுவீர்கள்.
என்னடா இது ? ஈழத்தமிழனாய் இருந்து கொண்டு அவனுக்காகப் போராடும் எங்களை விமர்சிக்கும் இவனும் "துரோகிகள்" கும்பலில் சேர்ந்து விட்டானோ ? எனும் எண்ணம் எழுந்தால் அதைத் துடைத்தெறிந்து விடுங்கள்.
இப்பட்டத்தைக் குத்தி விடுவார்களோ எனும் பயத்தினால் உண்மையான எண்ணக்களை உள்ளத்தினுள்ளே அடக்கி வைத்து ஊமைகளாய், ஆட்டு மந்தைகளாய் தலையாட்டிக் கொண்டிருந்த எத்த்னையோ புத்திஜீவிகள் புதைக்கப் விட்டதன் எதிரொலிதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை.
சரியோ , தவறோ ஒரு இயக்கத்தின் தலைவனாயிருந்து உயிர் நீத்த "உயர்திரு மேதகு வே.பிரபாகரன்" அவர்களின் மறைவையே சோக நிகழ்வாக வீரவணக்கம் செய்ய முடியாத வகையில் அந்த முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்து வரலாறு தேடிக் கொண்ட உன்னத இனமல்லவா எம் ஈழத்தமிழர் ?
தொப்புள் கொடி உறவுகளே ! உங்களில் யாருக்காவது ஈழம் சென்று "மேழக்குடி யாழ்ப்பாணத்தவரின்" இன்றைய நிலையை கண்ணால் பார்த்து விட்டு போராட வேண்டும் எனும் எண்ணம் எழவில்லையா?
அரசியல் பலிகடாக்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்யும் போது , புலம்பெயர் தேசத்தில் சரி அன்றி ஈழத் தமிழ்ப்பிரதேசங்களில் சரி எத்தனை பேர் தீக்குளித்துள்ளார்கள்?
ஓ உயிர் தமிழ்நாட்டுத் தமிழருக்கு துச்சம்தானே ! ஈழத்தமிழனின் உயிர் மட்டும், மிகவும் போற்றப்பட வேண்டியது அல்லவா?
அதை விடுங்கள் தமிழக மாணவர்களின் உயிர்த் தியாகத்தைத் தூண்டி சீண்டி விடும் உங்கள் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த எத்தனைபேர் ஈழத்தமிழருக்காய் உயிர்நீத்துள்ளார்கள் ?
ஓ ! அவர்கள் தலைவர்கள் அல்லவா ? தொண்டர்கள் அல்லவே !
உங்களின் இந்த நிறைவேற முடியாத கோரிக்கைகளினால் ஓரளவாவது சீரடைந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர் வாழ்க்கை எத்தனை ஆண்டுகள் பின் தள்ளப்படப் போகிறது என்பதைச் சிந்தித்தீர்களா?
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் . நான் மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளனோ அன்றி இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளனோ அல்ல .
சிங்கள மக்கள் அனைவரும் இனத்துவேஷிகளாகவும், தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை எதிர்ப்பவன்.
தமிழீழம் என்பதை என்றுமே இந்தியாவோ அன்றி மேற்குலக நாடுகளோ ஏற்றுக் கொள்ளாது என்பதை புரிந்து கொண்டவன்.
இன்றைய உங்களது இந்தப் போராட்டத்தின் கோஷம் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை முன்வைத்திருப்பதனால் வெர்றி சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்.
உலகத்தமிழர்கள் அனைவரினதும் நலன்களைக் கருத்தில் கொண்ட உன்னத சொந்தங்களான உங்கள் போராட்ட உத்வேகம் உதவாதவர்களின் வழிகாட்டுதலினால் செலவழிந்து உண்மையாக தேவைப்படும் நேரத்தில் உபயோகிக்கப்பட முடியாத வகை வலுவிழந்து போவதை விரும்பாதவன்
இன்றைய இலங்கைத் தலைநகரம் கொழும்பை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்கள் மிகவும் வெற்றிகரமாக சிங்களர்கள் மத்தியிலே வியாபாரம் செய்து கொண்டு லாபமிக ஈட்டிக் கொண்டு வளமாக வாழ்கிறார்கள் .
சிங்கள மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இனத்துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இது எவ்வாறு சாத்தியமாகியிருக்கும் ?
உங்களின் இடையறாத ஈழத்தமிழர்களின் இன்னல் அகற்றும் போராட்டம் இனத்துவேஷமிக்க போராட்டமாக புலம்பெயர் புலிப்பினாமிகளின் கைக்கூலிகளாக இயங்கும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செய்கை இத்தமிழர்களின் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிந்தித்தீர்களா ?
இதே வகையில் தான் ஈழத்தமிழர்களுக்கான வாழ்வியல் உரிமைப்போராட்டமாக ஆரம்பித்த போராட்டம் புலிஅராஜகத்தினால் உருமாற்றப்பட்டு இனத்துவேஷ போராட்டமாக மாறியதன் விளைவு இன்று நாம் காணும் ஈழத்தமிழரின் நிலை.
ஈழத்தமிழர் பிரதேசத்தின் முதல் அமைச்சராக கோலோச்ச வேண்டிய பிரபாகரன் அராஜகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததினால் இன்று நந்திக்குடாவில் நாசகமாக்கப்பட்டது கண்டு கண்ணீர் சிந்தியவர்களில் நானும் ஒருவன்.
ஏன் என்கிறீர்களா?
ஓராயிரம் பாலச்சந்திரன்களின் மறைவுக்கு காரணமாயிருந்த பிரபாகரன் தனது மண்ணில் தன் மக்களிடையே மறைந்த போது வீரவணக்கம் செய்யக்கூட முடியாத நிலையைக் கண்டததினால் இதைத் தோற்றுவித்தது இன்று உங்களைத் திசைமாற்றி வழிநடத்தும் அதே புலம்பெயர் புலிப்பினாமிகளின் கைக்கூலிகள் தான்.
(தொடரும்)
நல்லையா குலத்துங்கன்
(ஈழத்திலிருந்து)
I have heard there are seven people looks alike in this world. Today I have met one person who thinks 100% like me. Tamils living in Sri Lanka is badly hurt again by this ridiculous attitude by students and politicians in Tamil Nadu.
ReplyDeleteNalliah Kulathingan`s explanation
ReplyDeleteis really wonderful.He explans how
the younger genration in TN being
mesmorized by the dramtic speeches of
the opportunists.Political opportunism is very common among the
TN politicians,the practice of using situations unfairly to gain advantage for themselves without thinking how their actions will affect their own younger generation.Even it may cause dire damages to the stablity of the neighboring countries too.
Rather than writing to strangers,why not you write to your own people,so they may be knowing how to protect and guide themselves.
ReplyDeleteLet them tune their brain as they want,but this is our internal matter we must be united and careful to face every outside interferences
ReplyDeleteமிகவும் தெளிவான உண்மை. தமிழ் நாட்டு செய்திகளுக்கு அனுப்புங்கள்.
ReplyDeleteபத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டு இவ் மடலை தமிழ் நாட்டில் மாணவர்கள் அறியும் படி செய்யுங்கள்.
This is a true issue and wonderfull explanations. Media team should send this one to Tamilnadu media for publications, Then the all LTTE diasporas brein washed Tamilnaadu people get some understand. Including CM Jeyalalitha + Old man too.
ReplyDelete