Tuesday, April 30, 2013

கொழும்பு நகரில் 17 மேதின ஊர்வலங்கள்.

பாட்டாளி மக்களின் உரிமைக்குரல் எழுப்பப்படும் மே முதலாம் திகதி கொழும்பு நகரில் 17 மே தின ஊர்வலங்கள் உட்பட 16 கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மே முதலாம் திகதி கொழும்பு நகரின் போக்குவரத்து ஒழங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில், அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாடு, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் பேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக மே தினத்தில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென, விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே தினம் பொது விடுமுறை என்பதனால், அலுவல்களுக்காக கொழும்பு நகருக்கு வருகை தருவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, அநுர சேனாநாயக, மக்களை கேட்டுள்ளார். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் காரணமாக, பல பிரதான வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பதற்காக, கொழும்பு நகரில் பிரவேசிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, அநுர சேனாநாயக அவர் கேட்டுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு, கொழும்பு நகரில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழப்பகரமான நிலைமைகள் ஏற்படுவதை தடுக்க, அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மே தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன, வாகன போக்குவரத்து திட்டமிடல்கள் தொடர்பில் பொது மக்கள் சிறந்த விளக்கத்துடன் செயற்பட வேண்டுமென, கேட்டுள்ளார். இத்தினங்களில் பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பிரதான ஊர்வலம், தாமரை தடாகத்திலிருந்து க்ரீன்பாத் வீதி வரை இடம்பெறும். காலை 09.00 மணிக்கு இந்த வீதி மூடப்படும். பிரதான ஊர்வலம் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகும். பொரளை ஊடாக வரும் வாகனங்கள் பழைய புலொஸ் வீதி ஊடாக செல்ல வேண்டும். பித்தல சந்தியிலிருந்து தர்மபால மாவத்தை ஊடாக ஊர்வலம் செல்லும்போது, ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்போரின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பித்தல சந்தியிலிருந்து நகர மண்டபம் வரை, இவ்வாறு வாகன போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

நுகேகொடையிலிருந்து பத்தரமுல்ல ஊடாக கண்டி மற்றும் நீர்கொழும்பு செல்லும் வாகனங்கள், வெலிகட சந்தியிலிருந்து ஓபேசேகரபுர வீதியுடாக, கொலன்னாவை நீர்த்தாங்கி ஊடாக, வெல்லம்பிட்டி பொலிஸ், ஒறுகொடவத்த ஊடாக, கண்டி வீதிக்கு செல்ல முடியும். கடுகதி வீதியூடாக வரும் வாகனங்கள், மாலபே, கடுவெல, களனி ஊடாக கட்டுநாயக வீதியை சென்றடைவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment