இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஸ்ட அமைச்சருமான டி.யூ. குணசேகர, Daily FT என்ற ஆங்கில ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் சமித்தா குறூப்பு(Chamitha Kuruppu) அவர்களுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின் முக்கியமான சில பகுதிகள் கீழே -
கேள்வி: 13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்காக புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்திருக்கிறது. இது என்ன கூட்டணி? இதன் அங்கத்தவர்கள் யார்?
பதில்: 13ஆவது திருத்தத்தை நீக்கக்கோரி சில அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் இயக்கம் ஒன்று நடாத்தப்படுகிறது. 13ஆவது திருத்தத்தை ஆதரிக்கும் எல்லாக் கட்சிகளும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பவர்களும் எம்முடன் கலந்துரையாடியிருக்கிறார்கள்.
13ஆவது திருத்தத்தை நீக்கக் கோரும் இயக்கத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிராது நிச்சயமாக அதில் தiயிட்டு அதைத் தடுப்பது என நாம் இணங்கியுள்ளோம். இந்தக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் 8 கட்சிகள் பங்குபற்றின. அவையாவன: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆர்.தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சம சமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பனவாகும். மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இருக்கின்றனர். ராஜித சேனரத்தின, அதாவுட செனிவிரத்ன, டிலான் பெரேரா மற்றும் றெஜினால்ட் கூரே ஆகிய அமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலின் போது பிரசன்னமாகி இருந்தனர்.
13ஆவது திருத்தம் முழுமையான ஒன்று என நாம் கருதவில்லை. குறிப்பாக தற்போதுள்ள பட்டியலில் உள்ள விடயங்கள் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது. ஆனால் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைக்காமல் இதை நீக்குவதை அனுமதிக்க முடியாது.
அந்தக் கூட்டத்தில் நாம் இரண்டு தீர்மானங்களை மேற்கொண்டோம்.
1. அரசியலமைப்பில் இருந்து 13ஆவது திருத்தத்தை நீக்குவதைத் தடுப்பது.
2. அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கோருவது.
எமது கருத்துக்களைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளோம். அரசாங்கத்திலுள்ள சில உறுப்பினர்கள் 13ஆவது திருத்தத்தை நீக்கக்கோரி இயக்கம் ஒன்றை நடாத்துவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளோம்.
கேள்வி: 13ஆவது திருத்தத்தை நீக்கும் முயற்சிக்கு எதிராக 30 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முன்னணியாகச் செயற்படுவதாகக் கூறினீர்கள். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இந்தப் பலம் போதுமென்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: பெரும் தொகையினரான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்குச் சாதகமாக இருக்கின்ற போதிலும், அவர்கள் அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. மாகாணசபைகளில் இருந்து வந்த பெரும்பாலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மை ஆதரிக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை ஆதரிக்கின்றனர். அவர்கள் முன்னுக்கு வரவில்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துள்ளோம்.
13ஆவது திருத்தத்தை ஆதரித்த ஆரம்பகால நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முதலாவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். அதற்காக 10 பயமுறுத்தல்களும், என்னைக் கொல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளைச் செய்வது அவசியம் என நான் நினைத்தேன். 13ஆவது திருத்தம் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவி என்பது எனது பலமான அபிப்பிராயமாகும்.
கேள்வி: காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: இவைகள் மிகைப்படுத்திக் கூறப்படுபவை என நான் கருதுகிறேன். இந்தப் பிரச்சினைகள் விடயங்களைச் மேற்கொள்வதற்குத்; தடையானவை அல்ல. காணி அதிகாரத்தை எடுத்துக் கொண்டோமானால், அது மாகாணசபைப் பட்டியலிலும், அதேநேரத்தில் மத்திய அரசாங்கப் பட்டியலிலும் இருக்கின்றது. ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சின்படி, நாம் ஒரு காணிக் கொள்கையையும், அதற்கான ஆணைக்குழு ஒன்றையும் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகள் இதைப் பயன்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது. எமது நாட்டில் காணி என்னும்போது, அவை அரச காணிகளேயொழிய, தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான காணிகள் அல்ல. கடந்த 30 வருடங்களாக நாட்டில் யுத்தம் நடைபெற்று வந்ததால், அந்தப் பிரதேசங்களில் காணிப் பங்கீடுகள் நடைபெறவில்லை. வடக்கு கிழக்கில் மட்டும் அரச காணிகள் பங்கிடப்படாத நிலை தொடர்கிறது. மற்றைய மாகாணங்களில் காணிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் கொழும்பிலுள்ள மக்கள் வந்து தமது காணிகளை அபகரித்துவிடுவார்கள் என்ற பயம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. எம்மிடம் பலமான ஒரு காணிக் கொள்கை இருக்குமானால், அந்தக் கொள்கையை அமுல்படுத்த முடியும்.
அதன் பின்னர் சரியான வழியில் காணிகளைப் பங்கீடு செய்முடியும். இந்த விடயத்தை நீங்கள் அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்படுத்தினீர்களானால், பின்னர் அங்கு குழப்பம்தான் ஏற்படும். ஒரு பாரபட்சமற்ற அமைப்பைக் கொண்டிருப்பதே இதற்குச் சிறந்ததாகும். ஒரு கொள்கை உருவாக்கப் பட்டுவிட்டால், ஆணைக்குழு தன் கடமைகளை முன்னெடுக்க முடியும்.
பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரையில், எனது தனிப்பட்ட அபிப்பிராயம் உடனடியாக அதைவழங்கக்கூடாது என்பதாகும். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால் தெற்கில் முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப் படுமாக இருந்தால், அவர்கள் அந்த அதிகாரங்களைத்; துஸ்பிரயோகம் செய்வதுடன், தவறாகவும் பயன்படுத்துவார்கள். தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்வரை, பொலிஸ் அதிகாரங்களை வழங்காமல் இருப்பதே சிறந்ததாகும்.
கேள்வி: 13ஆவது திருத்தத்தை நீக்கினால், அது பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வரவழைப்பதாக இருக்கும் என ஏன் கூறுகிறீர்கள்?
பதில்: 1987இல் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்தது. இப்பொழுது உண்மையில் இந்த 13ஆவது திருத்தத்தால் யார் பயன் பெற்றுள்ளனர்? இன்றுவரை வடக்கில் ஒரு மாகாண சபை கிடையாது. மற்றைய ஏழு மாகாண சபைகளிலும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் 13ஆவது திருத்தத்தின் நன்மைகளைப் பெறுகின்றனர். இந்த 13ஆவது திருத்தம் உண்மையில் சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ் - முஸ்லீம் மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது. அவர்கள் ஒருபோதும் இதன் நன்மைகளைப் பெறவில்லை. இதனால்தான் இந்த மக்களை நாம் இன்னொரு பேரழிவுக்குத் தள்ளுகிறோம் என நான் கூறுகிறேன். 13ஆவது திருத்தத்தில் நீக்கப்பட வேண்டிய முரண்பாடுகளும், விடயங்களும் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இதை மாற்றுவதானால், இதற்கு மாற்றீடான ஒன்றை நாம் கொண்டிருக்க வேண்டும்.
13ஆவது திருத்தம் என்பது இந்தியா திணித்த ஒன்று எனச் சொல்கிறார்கள். எப்பொழுது இந்த நாட்டைவிட்டு 700,000 மக்கள் வெளியேறினார்களோ, எப்பொழுது அவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றார்களோ, அப்பொழுதே இது ஒரு இந்திய விடயமாகிவிட்டது. இந்திய அரசாங்கம் தலையிட்டதற்கு அதுதான் காரணம். பாக்கு நீரிணைக்கு அப்பால் ஐந்திலிருந்து ஆறு கோடி வரையிலான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். சில வன்செயல்கள் வெடிக்கும்போது, தமிழ் நாட்டில் அதன் தாக்கம் ஏற்படுவது இயல்பானது. அவர்கள் ஒரே இனம், கலாச்சாரம், மதம் என்பவற்றைக் கொண்டிருப்பதால். அது இயல்பானது. நாம் ஏற்கிறோமோ இல்லையோ இது ஒரு சரித்திர ரீதியான உண்மையாகும்.
1983இற்குப் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறிய 700,000 பேரில், ஏறக்குறைய 300,000 பேர் தமிழ் நாட்டிற்குச் சென்றுள்ளனர். இது இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகும். அதன் காரணமாக இயல்பாகவே இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை இடம் பெற்றது. எது எப்படியிருந்த போதிலும் சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டது. அதில் சில பலவீனங்கள் உள்ளன. இந்தத் தீர்வை நீக்குவதற்கு கடந்த 25 வருடங்களாக முயற்சிகள் செய்யப்பட்டாலும். வடக்கு கிழக்கிலிருந்து அதை ஒருபோதும் நீக்க முடியவில்லை. இப்பொழுது செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்ற பேச்சுகளுக்கடையில் இது வெளிவந்துள்ளது. முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகி உள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்ரெம்பரில் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதில் வெற்றிபெறக்கூடும். விரும்பியோ விரும்பாமலோ இதற்கு நாம் உதவி செய்ய முடியாது. ஏனைய கட்சிகள் அங்கு சென்று, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களை வென்றெடுக்க வேண்டும். அப்படியான சமயத்தில் 13ஆவது திருத்தத்தை நீக்கக் கோரும் இயக்கத்துக்கான அச்சுறுத்தல் உண்டு. அதை நாம் அனுமதிக்கக்கூடாது. ஏற்கெனவே மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு வரலாறு வழங்கியுள்ள சந்தர்ப்பம் மீண்டும் வரப்போவதில்லை. எப்படி நாம் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட முடியும்? அப்படி விடுவோமானால், தீவிரவாதிகளின் கை ஓங்கிவிடும்.
கேள்வி: ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் என்ன விடயத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: இந்தக் கடிதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உள்ளது. 13ஆவது திருத்தத்தை நீக்கும்படி கோரி நாட்டில் ஒரு இயக்கம் நடாத்தப்படுகிறது என்பதை இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டுகின்றது. நாம் இந்தக் கடிதத்தில் அவ்வாறான ஓர் இயக்கத்தை எதிர்ப்பதைத் தெரிவித்துள்ளதுடன், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளோம். 13ஆவது திருத்தம் தமிழ் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், ஜனநாயகத்தையும் விரிவுபடுத்துகின்றது. இந்த நன்மைகளை வடக்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை. ஜனாதிபதி இதை நீக்குவதற்கு அனுமதித்தாரானால், முற்றுமுழுதாக புதிய சூழ்நிலை உருவாவதுடன், நாட்டில் சமாதானமும் இல்லாமல் போய்விடும்.
கேள்வி: ஜனாதிபதியிடமிருந்து இதற்கு என்ன பிரதிபலிப்பை எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: இது சம்பந்தமாக ஜனாதிபதி எதையும் செய்துவிட முடியாது. குறைந்த பட்சம் யதார்த்த நிலைமையையாவது அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
கேள்வி: உங்கள் எதிர்ப்பையும் மீறி, ஜனாதிபதியும் அரசாங்கமும் 13ஆவது திருத்தத்தை நீக்கினால் அல்லது திருத்தங்கள் செய்தால் என்ன நடக்கும்?
பதில்: இது நடக்கக்கூடியது அல்ல. கடந்த வாரம் நாம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, நாடாளுமன்றதெரிவுக்குழு என்னத்தைப் பிரேரிக்கின்றதோ, அதைத்தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். அதுவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கோருவதற்கான காரணம். நாம் 100 வீதமான தீர்வை அடைய முடியாமல் விட்டாலும், சிலவிடயங்களிலாவது இணக்கப்பாட்டுக்கு வர முடியும்.
கேள்வி: ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து பணியாற்ற வரும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும்படி நாம் அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க விரும்புகின்றோம்.இதுபற்றிக் கலந்துரையாட விரும்புகின்றோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண நாம் விரும்புகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து தொடர்ந்து தன்னை விலக்கி வைத்திருப்பதால், எம்மால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் இருக்கிறது. அதனால்தான் அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி நாம் அழைக்கின்றோம்.
கேள்வி: இதற்கு என்ன மாதிரியான சமிக்ஞை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து உங்களுக்குக் கிடைத்துள்ளது?
பதில்: எமது கூட்டமைப்பின் கூட்டம் டிசம்பர் 8ம் திகதியில் நடைபெற்றது. இந்த நாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பு என்பன காரணமாக நெருக்கடியான தினமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்தும் இவ்விடயத்தைக் கலந்துரையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. விரைவில் அவர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து பதிலைப் பெறலாம் என்று நம்புகின்றோம்.
வானவில் இதழுக்காக சுலோசனாவினால் மொழி பெயர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment