சமத்துவமின்மையும் அமெரிக்க ஜனநாயகமும். Joseph Kishore
ஜனாதிபதி ஒபாமா பொருளாதார மீட்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவித்து செவ்வாயன்று கூட்டரசின் நிலை (State of the Union) குறித்த வருடாந்த உரையை ஆரம்பித்தார. “நெருக்கடியின் இடிபாடுகளை நாம் ஒவ்வொன்றாக அகற்றிவிட்டோம், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நம் கூட்டரசு வலுவாக இருக்கிறது என்று கூற முடியும்” என்றார்.
கடந்த மாதக் கடைசியில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் சமீபத்திய சமூக சமத்துவமின்மையை பற்றிய தரவுகள், இந்த உரை அறிக்கை எதைக்குறிக்கிறது என்பதை இன்னும் துல்லியமாகத் தெளிவுபடுத்துகிறது. ஒபாமா மற்றும் அரசியல் ஸ்தாபனம் முழுவதற்கும், “நெருக்கடி” பற்றிய முக்கிய குறியீடுகளாக இருப்பது பங்குச் சந்தைகளும் அத்தோடு பெருநிறுவனங்களினதும் நிதிய உயரடுக்குகளினதும் செல்வம்தான்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் எமானுவல் சாயெஸால் ஒன்றாகச் சேர்த்து கொண்டுவரப்பட்ட தரவுகளின்படி, அதாவது 2009 க்கும் 2011க்கும் இடையே – அதாவது “மீட்பின்”முதல் இரண்டு ஆண்டுகள் – சராசரி உண்மையான வருமானம் ஒரு குடும்பத்திற்கு 1.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், “உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் வருமானங்கள் 11.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் கீழுள்ள 99 சதவிகிதத்தினரது வருமானங்கள் 0.4 சதவிகிதம் சுருங்கிவிட்டது. எனவே உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் மீட்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் வருமான ஆதாயங்களாக 121 சதவிகிதத்தைப் பெற்றுள்ளனர்” என்று சாசெயஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் உண்மையில் இந்த இரண்டு ஆண்டுகளின் மொத்த வருமான வளர்ச்சி அனைத்தையும் விழுங்கியுள்ளதுடன், அதைத்தவிர கூடுதலாக 20 சதவிகிதத்தையும் விழுங்கியுள்ளனர். இப்புள்ளிவிவரங்கள் நிரூபிப்பது என்னவென்றால், ஒரு மாபெரும் செல்வத்தின் இட மாற்றமானது, பெரும்பாலான மக்களின் அதாவது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நிதியச் சந்தைகளுக்குள் நிதிகளாக உட்செலுத்தியது என்பதுதான்.
சாயெஸ் மேலும் கூறுவது: “2012ல் உயர்மட்ட 1 சதவிகிதத்தினர் எழுச்சி அடையக்கூடும்; இதற்குக் காரணம் ஏற்றம் அடைகின்ற பங்குகளின் விலைகள் மற்றும் வருமானத்தைப் பெறும் காலத்தை மாற்றி 2013 ஆண்டின் உயர்ந்த வரி விகிதங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இருப்பதனாலுமாகும். கீழேயுள்ள 99 சதவிகிதத்தினர் சற்றே கூடுதல் மெதுவான வளர்ச்சி என்று 2011 இருந்து 2012 வரை உயர்மட்ட 1 சதவிகிதத்தினரைவிட இருக்கலாம். இந்தக் கருத்துக்களானது உயர்மட்ட வருமான பகிர்வுகளை தற்காலிகமாகத்தான் பெருமந்த நிலை குறைத்ததேயன்றி 1970 களிலிருந்து பெறப்படுகின்ற உயர்மட்ட வருமானப் பகிர்வுகளை வியத்தகு அதிகரிப்புக்களை நிறுத்த எதுவும் செய்யவில்லை என்பதாகும்.”
வருமானப் பகிர்வில் இத்தகைய போக்குகளானது வெறும் அருவமான பொருளாதார சக்திகளின் விளைவு மட்டும் அல்ல. இவைகள் ஓர் உறுதியான, இரக்கமற்ற வர்க்கக் கொள்கையானது முதலில் புஷ்ஷால் பின்பற்றப்பட்டதும் பின்னர் ஒபாமாவின் கீழ் விரிவாக்கப்பட்டதன் விளைவுதான். முன்னோடியில்லாத அளவில் வரலாற்றுத் தன்மை படைத்த நிதிய ஊகத்தின் விளைவாக ஏற்பட்ட 2008 சரிவை எதிர்கொள்ளும் வகையில், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பு வங்கி ஆகியவைகளால் வங்கிகளுக்கு வரம்பில்லாத அளவிற்கு நிதிகள் அளிக்கப்பட்டன.
பங்குச் சந்தை ஏற்றத்திற்கு நிதியளிப்பதற்கு, கூட்டமைப்பு வங்கி கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் பெறுமதியுடைய சொத்துக்களை 2008 இலிருந்து வாங்கியுள்ளதுடன், பிரதானமாக இதே அளவு பணத்தை அச்சடித்து நிதிய அமைப்பு முறைக்குள் மாற்றியுமுள்ளது. சர்வதேச அளவில் ஒரு சமாந்திரமான கொள்கையைத்தான் அரசாங்கங்கள் தொடர்ந்துள்ளன. இதன் விளைவுகள் கணிக்கும்படிதான் உள்ளன: அதாவது சொத்துக் குமிழிகள் மீண்டும் பெருத்துள்ளன; அதே நேரத்தில் நிதியப் பிரபுத்துவத்தின் அறவிடமுடியாக் கடன்களானது மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்க வரவு-செலவுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்த நடவடிக்கைகளின் விளைவுகளானது மக்கள்தொகையில் மிகப் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஆகும். கூட்டரசு நிலை குறித்த உரையில், உற்பத்தித்துறை வேலைகளில் நம்பப்பட்ட மீள்எழுச்சி குறித்து ஒபாமா தம்பட்டம் அடித்தார்—உண்மையில் அழிக்கப்பட்டுவிட்ட துறைகளில் ஒரு மிகச் சிறிய அளவுதான் மீட்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான வேலைகள் வறுமை மட்டத்தர ஊதியங்களின் அடிப்படையில்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை; அத்தோடு இதற்கு நிர்வாகத்தின் 2009ம் ஆண்டு கார்த் தயாரிப்புத் தொழிற்துறையின் மறுகட்டமைப்புத்தான் வழிகாட்டியாக இருந்தது.
இதன் விளைவாக, அமெரிக்காவில் “வேலை செய்யும் ஏழைகளின்” எண்ணிக்கை—வேலை செய்தும்கூடக் கிட்டத்தட்ட வறுமையில் வாழ்பவர்கள் -- தீவிரமாக உயர்ந்துள்ளது. 2011 ஆண்டில் 47.5 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமை விகிதத்தைக் காட்டிலும் 200 சதவிகிதம் வருமானத்திற்குக் கீழுள்ள குடும்பங்களில்தான் வாழ்ந்தனர். இது கிட்டத்தட்ட அனைத்து உழைக்கும் குடும்பங்களிலும் மூன்றில் ஒரு பகுதி ஆகும் (அதாவது 33 சதவிகிதம்); இது 2010இல் 31 சதவிகிதத்திலிருந்தும் 2007இல் 28 சதவிகிதத்திலிருந்தும் உயர்ந்துவிட்டது.
இப்புள்ளிவிவரங்கள் வேலையின்மையில் இருப்பவர்களை சேர்க்கவில்லை. உத்தியோகபூர்வமாக வேலையின்மை விகிதம் சரிவு என்றாலும்கூட, மில்லியன் கணக்கனவர்கள் உழைப்பாளர்கள் தொகுதியிலிருந்து நீங்கியிருப்பதால், மொத்த வேலையின்மை மக்கள்தொகை விகிதம் நெருக்கடிக்கு பிந்தைய அதனுடைய மிகவும் குறைந்த நிலையில்தான் உள்ளது.
“நல்ல முறையில் வாழும் மத்தியதர வர்க்கம்” என்னும் கருத்திற்கு உயிரூட்டும் நலிவான வனப்புரைக்குப் பின், நிர்வாகத்தின் கொள்கை அதனுடைய இரண்டாவது பதவிக் காலத்தில் பெரு வணிகத்தின் நலன்களுக்கு முற்றிலும் தாழ்த்தப்படுவதானது இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து வெட்டப்படுவதுடன் ஆரம்பிக்கும் என்பதை ஒபாமா தெளிவுபடுத்தினார்.
சமத்துவமற்ற தன்மையின் புள்ளிவிவரங்கள் அமெரிக்க சமூகத்தின் பண்பு குறித்து நிறையவே கூறுகின்றன; அதாவது இச்சமூகம் ஒரு மிகச் சிறிய பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தில் உள்ளது என்பதைத்தான். அரசியல் ஸ்தாபனத்தின் திட்டம் முழுமையும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மிகச் சிறிய பிரபுத்துவ சமூகத் தட்டின் செல்வத்தை உறுதிப்படுத்தத்தான் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தப் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையேயுள்ள மோதல்தான் அடிப்படையாக சமூகப் பிளவை ஏற்படுத்துகிறது; இதற்கு மாறாக, அரச கொள்கையின் ஒருங்கிணைந்த கூறுபாடுகளாக மாறிவிட்ட பல வகையான அடையாள அரசியல் வடிவங்கள் அல்ல.
இச்சமூக உறவுகள் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை அறிந்து கொள்ள மிகவும் முக்கியமானவை ஆகும். செய்தி ஊடகமோ அல்லது அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளோ காத்திரமான எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், எவ்வித நீதித்துறைப் பரிசீலனை அல்லது முறையான சட்ட வழிமுறைகளும் இன்றி அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்யும் உரிமையை ஒபாமா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் சாதாரணமாகவே ஒதுக்கித் தள்ளப்பட்டு நூற்றாண்டுகளுக்கு பின்னுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க குடிமக்களை நீதித்துறைக்கு புறம்பாகக் கொலை செய்வது குறித்த நிர்வாகத்தின் வெள்ளைத்தாள் பற்றிய ஆரம்பச் செய்தி ஊடக தகவல்களுக்குப்பின், இப்பிரச்சினை பெரிதும் கைவிடப்பட்டுவிட்டது. CIA க்குத் தலைமை தாங்குவதற்கு ஒபாமா தேர்ந்தெடுத்துள்ள ஜோன் பிரென்னன்தான், “படுகொலைப் பட்டியல்களை” உருவாக்கிய சிற்பி, இம்மாதப் பிற்பகுதியில் செனட்டால் இவரின் பதவி உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் பதாகையின் கீழ், நிறைவேற்று அதிகாரமானது இடையறாத விரிவாக்கத்தை கடந்த தசாப்தத்தில் கண்டுள்ளது; இதில் காலவரையறையற்ற தடுப்புக்காவல், இராணுவ ஆணையங்கள் முதல் உள்நாட்டு உளவு வேலை மற்றும் தகவல் தொடர்புத்துறையில் பெரும் தரவுகளின் அபிவிருத்தி வரை அடங்கியுள்ளன.
ஆட்சியின் ஜனநாயக வடிவங்களானது அமெரிக்க சமூகம் முழுவதும் படர்ந்திருக்கும் மிகப் பெரும் சமத்துவமற்ற தன்மைகளுடன் பொருத்தமாக இருக்கவில்லை.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் என்பது பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுள்ளதோடு மற்றும் நவீன பிரபுத்துவம் தன்னை நிலைநிறுத்தியுள்ள பொருளாதார அஸ்திவாரமான முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது.
0 comments :
Post a Comment